மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை: முதல்வர்!

மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை: முதல்வர்!

‘தமிழக அரசை, மத்திய அரசு எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை’ என்று தாம்பரத்தில் நடைபெற்ற அதிமுக தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாகப் பிரிந்தது. இந்த பிரிவுக்குக் காரணம் பாஜகதான் என்று அப்போதே கூறப்பட்டது. தொடர்ந்து அம்மா அணியில் தினகரனை ஒதுக்கிவைத்துவிட்டு முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தனியாக செயல்பட ஆரம்பித்தனர். அதுமுதல் அணிகள் இணைவு வரை அதிமுக உள்விவகாரங்களில் பாஜக தலையிடுவதாகப் பல்வேறு கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன. மேலும், தமிழக அரசை மத்திய அரசு கட்டுப்படுத்துவதாகவும் கூறிவந்தனர்.

இதை மெய்ப்பிக்கும் விதமாக அமைச்சர்கள், பன்னீர்செல்வம் அணியினர் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பதும், துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பன்னீர்செல்வத்துக்குப் பிரதமர் வாழ்த்துகள் தெரிவிப்பதும் அமைந்தது.

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் தமிழக அரசை, பாஜக கட்டுப்படுத்தவில்லை, மாறாக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகத்துக்குத் தேவையான நலத்திட்டங்கள் கிடைக்கும் என்று முதல்வரும், அமைச்சர்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் அதிமுகவின் 46ஆவது ஆண்டு தொடக்க விழா அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் (அக்டோபர் 21) மேற்கு தாம்பரத்தில் நடைபெற்ற தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், திமுக ஆட்சிக்காலத்தில் தமிழகம் மிகப்பெரிய கடுமையான மின்வெட்டுக்கு ஆளானது. தமிழக அரசை, மத்திய அரசு எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. பாஜக, காங்கிரஸ் என காலத்துக்கு தக்கவாறு மாறுவது திமுகதான். குடும்ப ஆட்சி நடத்திய கட்சி திமுக. அதிமுகவை யாராலும் அழிக்கவோ, உடைக்கவோ முடியாது. தமிழகத்தில் இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்கும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “தமிழக திட்டங்களுக்குத் தேவையான நிதியை பெறவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம். தடுப்பணைகள் கட்டுவதற்காக ரூ.1000 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. ஒருசொட்டு தண்ணீர்கூட வீணாகக் கூடாது என்பதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

எந்த துறைக்கும் இல்லாத அளவுக்கு பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கியது தமிழகம்தான். தற்போது 227 தொடக்க பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 402 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன” என்று பேசினார்.

சனி, 21 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon