மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

மோடிக்கு எப்படி தைரியம் வந்தது?

மோடிக்கு எப்படி தைரியம் வந்தது?

‘அதிமுகவை அழிக்க மோடிக்கு எப்படி தைரியம் வந்தது?’ என்றும் ‘அதைக் கொடுத்தவர்கள் அதிமுகவில்தான் உள்ளனர்’ என்றும் எடப்பாடி தரப்பை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா முதல்வராக ஆசைப்பட்டதால் அதிமுக இரண்டாகப் பிரிந்தது. அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அதிமுக ஒன்றாக இணைந்தது. அதிமுக பிரிந்ததற்கும், அதன்பின்னர் மீண்டும் இணைந்ததற்கும் காரணம் பாஜகதான் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றம்சாட்டி வந்தனர். அதிமுகவையும், தமிழக அரசையும் மத்திய பாஜக அரசுதான் இயக்குகிறது என்ற குற்றச்சாட்டுகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது போலவே இரு அணியின் தலைவர்களும் அவ்வப்போது டெல்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் சந்தித்து வந்தனர். மேலும், அணிகள் இணைந்து துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பன்னீர்செல்வத்துக்கு முதல் ஆளாக பிரதமர் நரேந்திரமோடி ட்விட்டரில் வாழ்த்துக் கூறினார்.

இதற்கிடையே பெரியகுளத்தில் நடைபெற்ற அதிமுக தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு ஆதரவாக உள்ளார். அதிமுகவுக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார். மோடி இருக்கும்வரை நம்மை யாரும் மிரட்ட முடியாது. இரட்டை இலை யாருக்குக் கிடைக்கிறதோ அதுதான் உண்மையான அதிமுக. மோடி இருக்கும்வரை அதிமுக கட்சியும் சின்னமும் நம்மிடம்தான் இருக்கும்” என்று பேசியுள்ளார்.

இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ், “அதிமுகவை எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது அருமையாக இருந்தது. எம்.ஜி.ஆருடைய புகழ் பட்டிதொட்டியெல்லாம் கொடிகட்டிப் பறந்தது. அப்படிப்பட்ட இந்தக் கட்சியை அழிக்க மோடிக்கு எப்படி தைரியம் வந்தது? அந்த தைரியத்தை கொடுத்தது நம் அதிமுகவில் உள்ளவர்கள்தான். எனவே, ஊடுருவிகள், எட்டப்பர்களையெல்லாம் களை எடுக்க வேண்டும். குறுக்கு வழியில் மோடி என்னென்னவோ செய்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு யாரும் துணை போகக் கூடாது” என்று கூறியுள்ளார்.

சனி, 21 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon