மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

பாரம்பர்ய சாணியடி திருவிழா!

பாரம்பர்ய சாணியடி திருவிழா!

தாளவாடி கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயிலில் நேற்று (அக்டோபர் 22) சாணியடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி கும்டாபுரம் மலைக்கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை அடுத்து வரும் 3-வது நாள்சாணியடி திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இது ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசி மகிழும் வினோத நிகழ்ச்சி.

அதன்படி இந்த ஆண்டுக்கான சாணியடி திருவிழா நேற்று காலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. முன்னதாக கிராமத்தில் உள்ள அனைத்துப் பசுமாட்டு சாணங்கள் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஊர்குளத்தில் இருந்து கழுதை மேல் சுவாமியை வைத்து ஊர்வலமாகக் கோயிலுக்கு அழைத்து வந்தனர்.

ஊர் தெய்வமான பீரேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆண்கள் சட்டை அணியாமல் கோவிலுக்குள் சென்று வழிபட்டனர்.

பின்பு பக்தர்கள், ஒருவருக்கொருவர் சாணத்தை மேலே வீசி மகிழ்ந்தனர். ஆண்கள் சாணம் வீசியதைப் பார்த்த பெண்கள் கரவோசை எழுப்பி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினார்கள். சாணியடி நிகழ்வுமுடிந்த பிறகு பக்தர்கள் குளத்தில் நீராடிவிட்டு பீரேஸ்வரரை வழிபட்டனர்.

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டனர்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon