மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

வெங்கையாவிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்!

வெங்கையாவிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்!

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, சிகிச்சை முடிந்த நிலையில் நேற்று மாலை வீடு திரும்பினார். அவரை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு 68 வயதாகும் நிலையில், அவருக்கு நேற்று முன்தினம் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் இதய நாளத்தில் செல்லும் குழாய் சுருங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெங்கையா நாயுடுவுக்கு ஆஞ்ஜியோகிராபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, குழாய் சுருங்கிய இடத்தில் ஸ்டென்ட் (STENT) பொருத்தப்பட்டது. மேலும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சிகிச்சை முடிந்து வெங்கையா நாயுடுவின் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து, நேற்று (அக்டோபர் 21) மாலை வீடு திரும்பினார். அவரை அடுத்த மூன்று நாள்களுக்கு பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், பார்வையாளர்களைச் சந்திக்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது உடல்நலன் குறித்து விசாரித்தார்.

அப்போது கலைஞரின் உடல்நலன் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon