மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

ஆசிய ஹாக்கி: பைனலில் இந்தியா!

ஆசிய ஹாக்கி: பைனலில் இந்தியா!

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் `சூப்பர் 4' சுற்றில் இந்திய அணி, 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் மலேசியா அணியுடன் மோதவிருக்கிறது.

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (அக்டோபர் 21) நடைபெற்ற `சூப்பர் 4' சுற்றில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொண்டது. விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, பாகிஸ்தானின் மேல் முறையீடு மூலம் அந்த வாய்ப்பு பறிபோனது. 7வது நிமிடத்தில் பாகிஸ்தானுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. எனினும் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் அதைத் தடுத்து பாகிஸ்தானுக்கு ஏமாற்றம் அளித்தனர். மேலும் பாகிஸ்தான் அணி, 11வது மற்றும் 12வது நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பினை சரியாக பயன்படுத்தத் தவறியது. இந்தியா கோல் வாய்ப்புகள் இன்றி தடுமாறிய நிலையில் பாகிஸ்தான் கிடைத்த வாய்ப்புகளை வீணடித்துக் கொண்டிருந்தது.

பின்னர் தொடங்கிய 2வது பாதி ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் அந்தச் சூழ்நிலையை தகர்த்து சத்பீர் சிங் இந்திய அணிக்கு முதல் கோலைப் பெற்றுத் தந்தார். இதன் மூலம் 1-0 என முன்னிலை பெற்றது இந்தியா. இதையடுத்து ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் 3வது முறையாக தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றினார். இதனால் இந்தியாவின் 2-0 என முன்னிலை பெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்த நிமிடத்திலேயே இந்திய வீரர் லலித் உபாத்யாய் அதிரடியாக ஒரு கோல் அடித்து 3-0 என இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இறுதியாக ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் பாஸ் செய்த பந்தை கோலாக மாற்றினார் இந்தியாவின் குர்ஜந்த் சிங். கடைசி வரையில் பாகிஸ்தானுக்கு ஒரு கோல் வாய்ப்பு கூட கிடைக்காததால் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் தென்கொரிய அணியும், மலேசியா அணியும் மோதின. இந்தப்போட்டியில் இரு அணி வீரர்களும் தலா ஒரு கோல் அடிக்க 1-1 எனச் சமன் ஆனது. இதனையடுத்து பி பிரிவில் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து மலேசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று (அக்டோபர் 22) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, மலேசியா அணியுடன் மோதவிருக்கிறது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon