மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

விஷால்: எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்!

விஷால்: எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்!

மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்தேன் என்று கூறியுள்ள எச்.ராஜாவுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால்.

மெர்சல் திரைப்படம் தொடர்பான விவாதங்கள், சர்ச்சைகள் இன்னும் முடிந்தபாடில்லை. ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா குறித்து விமர்சித்து வைக்கப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா உள்ளிட்ட பல தலைவர்கள் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாதத்தில் கலந்துகொண்ட ராஜா, "மெர்சல் காட்சிகளை இணையத்தில் பார்த்தேன்" என்று பேசினார். இது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பைரசி பிரச்னை தொடர்பாக தொடர்ந்து பேசிவரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் எச்.ராஜாவின் பேச்சு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு தேசியக் கட்சியின் தேசியச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தைச் சட்டவிரோதமாகப் பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தைச் சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள்? அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

எச். ராஜாவுக்கு... மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களைப் போன்ற ஓர் அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டுப் பிரதியைப் பார்ப்பது என்பது ஓர் உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதைச் செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதைக் கடுமையாகப் பாதித்துள்ளது. தங்களது செயலுக்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon