மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 6 ஜுன் 2020

கடத்தப்பட்ட குழந்தை ஒரு மணி நேரத்தில் மீட்பு!

கடத்தப்பட்ட குழந்தை ஒரு மணி நேரத்தில் மீட்பு!

நெல்லைப் பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை போலீஸார் ஒரு மணி நேரத்தில் மீட்டனர்.

நெல்லை மேலப்பாளையம் அமுதா பிரைட் நகரைச் சேர்ந்தவர்கள் சண்முகசுந்தரம் (38)- முத்துமாரி (29) தம்பதி. இவர்களுக்கு பரணிஷ்(4) என்ற மகனும் ஜெயஸ்ரீ (2)என்ற மகளும் உள்ளனர். சென்னையில் வசிக்கும் முத்துமாரியின் தங்கை தீபாவளி விடுமுறைக்காக நெல்லைக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். விடுமுறை முடிந்து, சென்னை திரும்புவதற்கு நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்துக்கு நேற்று (அக்டோபர் 21) இரவு சென்றுள்ளார். தங்கையை வழியனுப்ப முத்துமாரி தனது குழந்தைகளுடன் சென்றுள்ளார். பேருந்து வருவதற்கு நேரம் இருந்ததால் குழந்தைகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் பேருந்து வந்ததும் பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் அனைவரும் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது குழந்தை ஜெயஸ்ரீ இல்லாததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். பேருந்து நிலையம் முழுவதும் குழந்தையை தேடியுள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து, குழந்தை காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் மாநகர உதவி ஆணையர் மாரிமுத்து, காவல் ஆய்வாளர் உதய சூரியன் ஆகியோர் உடனடியாக பேருந்து நிலையத்துக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு பெண், குழந்தையுடன் சென்றதாக போலீஸாரிடம் தகவல் அளித்துள்ளார். அவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் என்ற தகவலும் போலீஸாருக்கு தெரிய வந்தது. அதனால் நெல்லை போலீஸார், செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு, குழந்தை குறித்து தகவல் கொடுத்துள்ளனர். அங்குள்ள போலீஸார், பேருந்தில் குழந்தையுடன் வந்து இறங்கிய பெண்ணைப் பிடித்து நெல்லைக்கு அழைத்து வந்தனர்.

அந்தப் பெண்ணை கைது செய்து நெல்லை போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அவரது பெயர் கோமதி (45) என்பதும், செய்துங்கநல்லூர் அருகில் உள்ள நாட்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. குழந்தையை எதற்காகக் கடத்தினார் என அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீஸாருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon