மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

குஜராத் தேர்தல் தாமதம்: தலைமை ஆணையர் விளக்கம்!

குஜராத்  தேர்தல் தாமதம்: தலைமை ஆணையர் விளக்கம்!

குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதமாவது ஏன் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி விளக்கம் அளித்துள்ளார்.

இமாச்சல பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பதவிக் காலம் வரும் ஜனவரி மாதத்தோடு நிறைவடைகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி, ‘இமாச்சல் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்’ என்று அறிவித்தது தலைமை தேர்தல் ஆணையம். ஆனால், குஜராத் மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.

சுயாட்சி பெற்ற அமைப்பாக கருதப்படும் தேர்தல் ஆணையம் குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்க ஏன் தாமதம் செய்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஒரு படி மேலே போய், ‘குஜராத் தேர்தல் தேதியை பிரதமர் மோடியே அறிவிக்கட்டும் என்று தேர்தல் ஆணையம் காத்திருக்கிறதா?’ என்று கேலியும் கோபமுமாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று( அக்டோபர் 21) இதுகுறித்து டெல்லியில் ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி, ‘’இமாச்சல பிரதேசமும், குஜராத்தும் பூகோள அடிப்படையிலோ, கால நிலை அடிப்படையிலோ ஒத்த மாநிலங்கள் அல்ல. எனவே, இந்த இரண்டு மாநிலங்களுக்கும் ஏன் ஒரே நேரத்தில் தேர்தல் அறிவிக்கவில்லை என்று கேட்பது நியாயமில்லை.

குஜராத் மாநிலத்தில் கடந்த ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் 7 மாவட்டங்களை வெள்ளம் தாக்கியது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது. இதற்கான நிவாரணப் பணிகள் செப்டம்பரில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வெள்ளத்தால் கிராம சாலைகள், நகர சாலைகள், மாவட்ட சாலைகள் என்று பல்வேறு சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவித்தால், ‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிடும். அவ்வாறு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டால் வெள்ள நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும். மேலும், வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.

மேலும், இமாச்சல பிரதேசத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நவம்பர் மாதத்துக்கு மேல் கடும் பனிபொழிவுக்கு வாய்ப்பிருப்பதால். நவம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்திவிடுமாறு கேட்டுக்கொண்டனர். இமாச்சல பிரதேசம் என்பது மலைப்பகுதி. குஜராத் என்பது சமவெளிப் பகுதி. எனவே, இரண்டு மாநிலங்களுக்கும் ஏன் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவில்லை என்று கேட்க முடியாது.

மேலும், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் குஜராத் தேர்தலில் எதிரொலிக்கும் என்ற புகார்களை ஆராய்ந்து, இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் டிசம்பர் 18க்குள் குஜராத்தில் தேர்தல் நடத்தப்படும்’’ என்று கூறியிருக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon