மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

மெர்சல்: ரஜினி, தினகரன் மௌனம் ஏன்?

மெர்சல்: ரஜினி, தினகரன் மௌனம் ஏன்?

மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரை பிரபலங்களும் கருத்து கூறிவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த், தினகரன் இருவரும் இதுதொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து கடந்த தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “மெர்சல் திரைப்படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும், இல்லையெனில் வழக்கு தொடரப்படும்” என்று தெரிவித்திருந்தார். இதற்கு ஒருபடி மேலே போய் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவோ, மெர்சல் நடிகர் விஜய்யின் பொருளாதார அறிவீனத்தையே காட்டுகிறது என்றும், ஜோசப் விஜய் என்றும் மதரீதியாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் பொன்.ராதாகிருஷ்ணனும் மெர்சல் திரைப்படத்துக்கு எதிராக பேசியுள்ளார்.

ஆனால், மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், திரைப் பிரபலங்களும், அறிக்கை மூலமாகவும், பேட்டி வாயிலாகவும் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அவர்கள், மெர்சல் திரைப்படம் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டுவிட்டது என்றும், அதை மறுபடியும் தணிக்கை செய்யத் தேவையில்லை எனவும் மெர்சல் திரைப்படத்தின் எதிர்ப்பு கருத்து சுதந்திரத்துக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் சில நாள்களாகத் தொடர்ந்து மெர்சல் திரைப்படத்தைப் பற்றிய விவாதங்களே இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை மெர்சல் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தும், அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரனும் எவ்வித கருத்துகளும் தெரிவிக்கவில்லை.

பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிவதற்கும், சசிகலா சிறை சென்றபிறகு தினகரன் போட்டியிட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கும், இரட்டை இலை வழக்கில் தினகரன் சிறை செல்வதற்கும், அமைச்சர்கள் அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு பின்னணியில் இருந்து ஒருங்கிணைந்த அணியினரை இயக்கியது பாஜகதான் என்று கூறப்படுகிறது. மேலும், தமிழக அரசை பின்னின்று இயக்குவது மத்திய பாஜக அரசுதான் என்று பல்வேறு தலைவர்களும் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

தொடர்ந்து கடந்த காலங்களில் தினகரன் அளித்த பேட்டியின் போதெல்லாம், அமைச்சர்கள் ஒருவித பயத்தில் என்னை ஒதுக்குவதாக கூறியுள்ளனர். அவர்களை யார் இயக்குகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும் என்று பாஜக மீது மறைமுகமாக விமர்சனத்தை முன்வைத்தார். ஆனால், தொடர்ந்து பாஜக எதிர்ப்பு நிலையில் இருக்கும் தினகரன், பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக, இதுவரை எவ்வித கருத்துகளையும் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்து கடந்த மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த், போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர். மேலும், கடந்த சில வருடங்களாகவே ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது எதிர்த்த பாஜகவினர், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஆதரித்தனர்.

மேலும், நடிகர் ரஜினிகாந்த்தும் பாஜக ஆதரவு மனநிலையிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. பல்வேறு பிரச்னையின்போதும் பாஜக மீது மென்மையான விமர்சனப் போக்கையே கடைப்பிடித்தார்.

இந்த நிலையில் திரைத்துறையில் இதுவரையில் பொதுவெளியில் கருத்து கூறாதவர்களே வந்து கருத்து சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், முன்னணியில் இருக்கக்கூடிய மூத்த நடிகரான ரஜினிகாந்த், மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக கருத்து கூறாதது திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மெர்சல் தொடர்பாக ரஜினிகாந்த், தினகரன் இருவரும் ஒருவார்த்தை கூட பேசாதது ஏன் என்ற கேள்வியும் பொதுவெளியில் எழுந்துள்ளது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon