மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 12 டிச 2019

இந்தியன் 2 வில் ரவி வர்மன்?

இந்தியன் 2 வில் ரவி வர்மன்?

கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. தில் ராஜு தயாரிக்கவிருந்த இப்படத்தை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது இதில் இந்திய சினிமாவுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவி வர்மன் பணிபுரிய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

70 வயதான சேனாதிபதி கேரக்டரில் ஊழலுக்கு எதிராகப் போராடும் சுதந்திரப் போராட்ட தியாகியாக நடித்த கமலின் பாத்திரம் 20 வருடங்களைக் கடந்த பிறகும் இன்றைய அரசியல் சூழலுக்கும் பொருந்தும்படியாக இருக்கிறது. ஊழலை ஒழிக்காமல் நாடு முன்னேறாது என்று தொடர்ந்து கமல் குரல் கொடுத்து வருவதுடன் விஜய்யின் மெர்சல் படத்திற்கு எதிராக எழும் விமர்சனங்களுக்குக் காத்திரமாக தனது கருத்தை முன் வைத்து வருகிறார். இந்தச் சூழலில் இந்தியன் 2 திரைப்படம் முழுக்க அரசியல் பேசும் படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் இதற்கு முன்பு அந்நியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், ஏழாம் அறிவு, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களிலும் பணிபுரிந்துள்ளார்.

ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரவிவர்மன் பிஸியாக பணிபுரிந்து வருகிறார். இது தொடர்பாக டெக்கான் கிரோனிக்கலுக்கு அவர் அளித்த பேட்டியில், "ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகி வரும் சஞ்சு படத்தில் பணிபுரிந்து வருகிறேன். இந்த சுயசரிதை திரைப்படத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பணிபுரிந்து வருகிறேன்" என்று கூறியுள்ளார். இந்தியன் 2 படம் குறித்து கேட்கப்பட்டபோது அதை மறுக்காமல் மிகப்பெரிய புன்னகை செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon