மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

ரயிலை இழுத்து வந்த ஊழியர்களுக்குப் பரிசு!

ரயிலை இழுத்து வந்த ஊழியர்களுக்குப் பரிசு!

பாதை மாறிச் சென்ற ரயிலை, நடைமேடைக்கு இழுத்து வந்த ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் பரிசளிக்கப்படும் என மேற்கு ரயில்வே இன்று (அக்டோபர் 22) அறிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 19) , 16 பெட்டிகள் கொண்ட மும்பை சென்ட்ரல் - லக்னோ சுவிதா விரைவு ரயில் (எண்- 82907) 2வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தது. மாலை 7.45 மணி அளவில் புறப்பட தயாராக இருந்தது. சிக்னலில் சிவப்பு விளக்கு இருந்ததால், பச்சை விளக்கிற்காகக் காத்திருந்தது. இந்நிலையில், சிக்னல் மாறும் முன்பே, ரயில் இன்ஜினை ஓட்டுநர் இயக்கியதால் ரயில் குறிப்பிட்ட எல்லையைக் கடந்து சென்றது. தண்டவாளம் இல்லாததைக் கவனித்ததும் ரயிலை உடனடியாக ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். எனினும், ரயிலின் கடைசி பெட்டி, நடைமேடையைக் கடந்துவிட்டது. அந்த வழித்தடத்தில் இருந்து, விரைவு வழித்தடத்திற்கு மாறுவதற்குத் தண்டவாளம் இல்லாததால், ரயிலைப் பின்னோக்கி நகர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனடியாக ரயிலில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர்.

ரயில் இன்ஜினின், பின்னோக்கி நகர்த்தும் திறன் குறைவாக இருந்ததால், மணிக்கு 5 கி.மீ., வேகத்தில் ரயில் பின்னோக்கி இயக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள், கூலித் தொழிலாளிகள் என 40 பேர் ரயிலைப் பின்புறமாக தள்ளி நடைமேடைக்குக் கொண்டு வந்தனர். முதன் முறையாக நடைபெற்ற இச்சம்பவம், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து சிக்னலை மதிக்காமல் சென்ற ரயில் ஓட்டுநர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

இந்நிலையில், ரயிலைத் தள்ளிய ஊழியர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என மும்பை மண்டல ரயில்வே மேலாளர் முகுல் ஜெயின் இன்று அறிவித்துள்ளார்.

ரயிலைத் தள்ளிய 40 ஊழியர்களுக்கும் 10,000 ரூபாய் பரிசு என அறிவித்துள்ளனர். அதன் படி, ஒவ்வொரு ஊழியருக்கும் 250 ரூபாய் மட்டுமே கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon