மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

மோடியின் மூன்றாவது குஜராத் பயணம்!

மோடியின் மூன்றாவது குஜராத் பயணம்!

இமாச்சல பிரதேசத்துக்கு தேர்தல் தேதியை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையம், குஜராத்துக்கு மட்டும் இன்னமும் தேர்தல் தேதியை அறிவிக்காமல் மௌனம் காப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்... கடந்த செப்டம்பர் 14 ஆம்தேதியில் இருந்து இன்று வரையிலான 38 நாட்களில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இன்று குஜராத் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே அவரே தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ள நிலையில்... இன்று குஜராத் வந்த மோடி பல நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவோடு சேர்ந்து குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் மோடி. பின் அக்டோபர் 7ஆம் தேதி குஜராத்துக்குப் பயணம் மேற்கொண்டு, தனது சொந்த நகரமான வத்நகர், ராஜ்கோட், துவாரகா, பரூச் ஆகிய நகரங்களுக்குச் சென்று பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க இருக்கிறார்.

மூன்றாவது முறையாக இன்று அக்டோபர் 22 ஆம் தேதி குஜராத் சென்றிருக்கும் மோடி பாவ்நகர் மாவட்டம் கோகாவில் இருந்து தஹேஜ் வரை கடல்பகுதியில் ரூ.615 கோடி செலவில் விசைப் படகு சேவையை தொடங்கி வைத்திருக்கிறார். இது இந்தியாவிலேயே பிரமாண்டம்மான முதல் நீர்வழிச்சாலைத் திட்டமாகும். பின்னர் வடோதரா செல்லும் அவர் ரூ.1,140 கோடி மதிப்பீட்டில் மான் பூங்கா, இரண்டு மேம்பாலங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையம், விலங்குகள் மருத்துவமனை உள்ளிட்ட 8 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

குஜராத் மாநிலத்தில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பட்டேல் இன மக்களின் போராட்டத் தலைவரான ஹர்திக் பட்டேலுக்கு காங்கிரஸ் வெளிப்படையான அழைப்பு விடுத்துள்ள நிலையில், ‘நாங்கள் முழுமையாக பாஜகவை எதிர்க்கிறோம். ஆனாலும் இது பாஜகவுக்கும், காங்கிரஸுக்குமான தேர்தல் அல்ல’ என்று பொடி வைத்திருக்கிறார் ஹர்திக் பட்டேல்.

ஆக பட்டேல் சமூகத்தின் எதிர்ப்பு உறுதியாகிவிட்ட நிலையில், குஜராத் தேர்தலை எதிர்கொள்ள கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. தனது சொந்த மாநிலம் என்பதாலும், குஜராத் மாடல் என்று சொல்லியே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்றதாலும்... வர இருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலை தனது கௌரவ பிரச்னையாகக் கருதுகிறார் மோடி. அதனால்தான் யாரை நம்புவதையும் விட தன்னையே அதிகம் நம்பி தொடர்ந்து குஜராத்துக்கு சென்று நலத்திட்டங்களை அறிவிக்கிறார்.

மோடியின் குஜராத் பயணங்களுக்கும் நலத்திட்ட அறிவிப்புகளுக்கும் வாசல் திறந்து வைப்பதைப் போன்றே தலைமை தேர்தல் ஆணையமும், தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைத்துக் கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சிகள் இப்போதே பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டன.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon