மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

தீபாவளி கொண்டாடிய மாணவர்களைத் தண்டித்த பள்ளி!

தீபாவளி கொண்டாடிய மாணவர்களைத் தண்டித்த பள்ளி!

திருச்சியில் தனியார் பள்ளி ஒன்று மாணவர்கள் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியதற்குத் தண்டனை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் பாலக்கரை கீழப்புதூரில் சர்வைட் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று முன் தினம்(அக் 20) மீண்டும் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. காலை இறை வணக்கம் முடிந்ததும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காதவர்கள் யார் யார் என தலைமையாசிரியை லில்லி ஆண்டனி மாணவர்களிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் பட்டாசு வெடிக்காத மாணவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து வகுப்பறைக்கு அனுப்பிவிட்டு, பட்டாசு வெடித்துக் கொண்டாடிய மாணவர்களைத் தனியாக அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

இவர்கள் இருளின் பிள்ளைகள் என்று கூறி இறை வணக்கம் முடியும் வரை கை கட்டி தலை குனிந்து நிற்கும் படியும், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடித்ததற்காகக் கடவுளிடம் மன்னிப்பு கேட்குமாறு தலைமை ஆசிரியை லில்லி மிரட்டியுள்ளார்..

இதுதவிர தீபாவளியின் போது கையில் மருதாணி வைத்திருந்த மாணவிகளைத் தனியாக அழைத்து உடற்கல்வி ஆசிரியரான ஆண்ட்ரூ போஸ் அடித்துள்ளார். பின்னர் மாலை வீட்டுக்குச் சென்ற மாணவர்கள் தங்களை கடுமையாகத் தண்டித்ததாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்குப் பள்ளி நிர்வாகம், “கல்வித் துறையிடம் இருந்தும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்தும் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று சுற்றறிக்கை வந்ததாகத் தெரிவித்து அதன் அடிப்படையில் மாணவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளது.

இதையடுத்து நேற்று (அக் 21) மாணவர்களுக்குத் தண்டனை அளித்தது குறித்து பெற்றோர்களும் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலரும் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்ததுடன், பாலக்கரை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பள்ளிக் நிர்வாகம் மத உணர்வுகளைக் காயப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon