மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

இருநூறில் சதமடித்த கோலி

இருநூறில் சதமடித்த கோலி

இந்திய சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (அக்டோபர் 22) தொடங்கியது. இது இந்திய கேப்டன் விராட் கோலி விளையாடும் 200வது ஒருநாள் போட்டியாகும். மேலும் ஐசிசியின் புதிய விதிமுறைகளின் கீழ் இந்தியா விளையாடும் முதல் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் தவான் முறையே 20 மற்றும் 9 ரன்களுக்கு ட்ரென்ட் போல்ட் வேகத்தில் வெளியேறினர். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 5.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்களாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து கோலி, கேதார் ஜாதவுடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். இந்திய அணி 11.4 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தது. 16வது ஓவரில் ஜாதவ், சான்ட்னர் பந்துவீச்சில் லூஸ்-ஷாட் அடித்து அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்பிற்கு 71ஆக இருந்தது. அதன் பிறகு தினேஷ் கார்த்திக், கோலியுடன் இணைந்தார்.

இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய கோலி 62 பந்தில் அரைசதம் கடந்தார். தினேஷ் கார்த்திக் 47 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து சௌதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய தோனி 25 ரன்னிலும், பாண்டியா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பாக ஆடிய கோலி தனது 200வது போட்டியில் சதமடித்து அசத்தினார். ஒருநாள் அரங்கில் இது அவருக்கு 31வது சதமாகும். சிறப்பாக ஆடிய கோலி 125 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்தது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon