மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

டெங்கு டெஸ்ட் தரமானதே: மருத்துவத்துறை விளக்கம்!

 டெங்கு டெஸ்ட் தரமானதே: மருத்துவத்துறை விளக்கம்!

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள தட்டு அணுக்கள் (பிளேட்லெட்) அளவுபார்க்கும் கருவிகளும், மூலப்பொருள்களும் அரசு மருத்துவமனைகளில் தான் தரமானதாகவும், உண்மையானதும் என்று, மின்னம்பலத்துக்கு விளக்கம் கொடுத்துள்ளார், கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்.

அக்டோபர் 21-ம் தேதி, நமது மின்னம்பலம்.காம் இதழில் மதியம் 1.00 மணி பதிப்பில், ‘டெங்கு சோதனை: பீதியடைவைக்கும் தமிழக அரசு’ என்ற தலைப்பில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் கருத்தைப் பதிவு செய்திருந்தோம்.

அந்த செய்தியில்... ‘கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலால் தமிழக மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்துவருகிறார்கள், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிளேட்லெட் அளவு பார்ப்பதில், அரசு மருத்துவமனையில் தரமில்லாமல், தவறான ரிப்போர்ட் கொடுத்து வருகிறார்கள், அரசு மருத்துவமனை லேப்களில் போதுமான ஊழியர்கள் இல்லை என்றும், டெங்கு காய்ச்சலில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மலிவு விளம்பரங்கள் தேடிவருகிறார்கள், கொசுமருந்து, கொசுவலை கொள்முதல் செய்வதில் கொள்ளையடித்துவருகிறார்கள்’ என்று, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த செய்தியைப் படித்துவிட்டு... மின்னம்பலத்தை தொடர்புகொண்டார் கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜவகர்லால்.

’’டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ரத்தத்தில் தட்டு அணுக்கள் எண்ணிக்கையைப் பரிசோதிக்க சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ள மிஷின் மற்றும் உபகரணங்கள் வாங்கியிருக்கிறது அரசு. அவற்றை வேலூர் சி.எம்.சி, செங்கல்பட்டு மெடிக்கல் கல்லூரியில் தரப் பரிசோதனை செய்த பிறகுதான், டெஸ்ட் எடுக்கிறோம். ஆனால், தனியார் மருத்துவமனைகளில் அப்படி குவாலிட்டி செக்கப் செய்வதில்லை, சான்றுகள் வாங்குவதில்லை,

அரசு மருத்துவமனைகளில் ஒரு நோயாளிக்கு ஒரு டெஸ்ட் டியூப்தான் பயன்படுத்துகிறோம்.

டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் உள்ள தட்டு அணுக்களைக் கண்டுபிடித்து அளவு பார்ப்பதற்கு எலிசா ஐ.ஜி.எம் டெஸ்ட் செய்கிறோம், இந்த டெஸ்டில்தான் உண்மையாகவும் சரியாகவும் இருக்கும். தனியார் மருத்துவமனை லேப்களில் கார்டு டெஸ்ட் செய்கிறார்கள், டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு கார்டு டெஸ்ட் செய்யக் கூடாது.

அரசுமருத்துவமனைகளில் ஹிட் முறையில் எலிசா ஐ.ஜி.எம், டெஸ்ட் செய்கிறார்கள், ஒரு ஹிட் என்றால் 92 பேருக்குப் பார்க்கவேண்டும், நோயாளிகள் நலன் கருதி அவசரத்துக்கு 20 பேர் ரத்தங்கள் பரிசோதனைக்கு வந்தாலும் ஒரு ஹிட்டு பயன்படுத்துகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் உள்ள லேப்களில் ஆள்கள் இல்லை என்றால் தற்காலிக பணியாளர்களை நியமித்துக்கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது’’ என்று விளக்கம் அளித்தார் ஜவஹர்லால்.

அவரிடம், ‘பரிசோதனைகளில் இவ்வளவு விரிவான முறைகள் இருந்தாலும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதுபோல் தெரியவில்லையே?’ என்றோம்.

'கடலூர் மாவட்டத்தில் 26 லட்சம் மக்கள் தொகை, 7 லட்சம் வீடுகள் உள்ளது, அனைத்து வீடுகளிலும் மருந்து அடிக்கமுடியாது, ஆய்வுப் பணிகள் முடிந்து டெங்கு கொசுகள் இருக்கும் இடங்களுக்குக் கொசுமருந்து அடித்துவருகிறோம். ஒரு லிட்டர் மருந்தில் 19 லிட்டர் டீசல் கலந்து, ஐந்து லிட்டர் டேங்க் மூலமாக தெளிக்கப்பட்டு வருகிறது’ என்றார் கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜவஹர்லால்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon