மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

நீயா நானா நிகழ்ச்சி நிறுத்தம்!

நீயா நானா நிகழ்ச்சி நிறுத்தம்!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நீயா நானா விவாத நிகழ்ச்சியில் 'கேரளப் பெண்கள் அழகா, தமிழகப் பெண்கள் அழகா' என்ற தலைப்பில் இன்று (அக்டோபர் 22) ஒளிபரப்பாக இருந்த விவாதம் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து நிறுத்தப்பட்டது.

நமது மின்னம்பலத்தில் இன்று காலை 7 மணி பதிப்பில் நீயா நானா நிகழ்ச்சியின் தலைப்பு பற்றியும், அதிலுள்ள சிக்கல்கள் பற்றியும் பெண்ணின் அழகு விவாதத்துக்குரிய பொருளா? என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தோம். பெண்களை அழகுப் பதுமைகளாகச் சித்தரித்து விவாதிப்பது அபத்தமானது எனப் பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மனிதி என்ற அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

“அவர்கள் எடுத்திருந்த தலைப்பே பிற்போக்கானது” என்கிறார் மனிதி அமைப்பைச் சேர்ந்த செல்வி மனோ. “அந்த விவாத நிகழ்ச்சி குறித்து வெளியிடப்பட்ட புரோமோவைப் பார்த்ததுமே கோபம் வந்தது. இரு மாநிலப் பெண்களை உட்கார வைத்து யார் அழகு என்பதை விவாதிப்பது முடிவு செய்வது கண்டனத்துக்குரியது. அதனால்தான், இதை நிறுத்தக் கோரி புகார் அளிக்க முடிவு செய்தோம்” என்று கூறுகிறார்.

இந்த விவாத நிகழ்ச்சியைத் தயாரித்தவர்களிடம் பேசினீர்களா என்று கேட்டபோது அவர், “நிகழ்ச்சி இயக்குநர் ஆண்டனி அவர்களிடம் பேசினேன். நீயா நானா என்பது பரந்த வெளி கொண்ட, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்ட பல முக்கிய விவாதங்களை மக்கள்முன் வைத்த இந்த நிகழ்ச்சி, இன்றைக்குப் பெண்களை இழிவுப்படுத்தும் ஒரு விவாதத்தை எடுத்துள்ளது வருத்தமளிக்கிறது என்று கூறினேன். அதற்கு அவர், ‘இதுதான் இன்றைய காலத்தின் உண்மையான நிலை. சமீபத்தில் வெளியான ஜிமிக்கி கம்மல் பாடலில் இருந்து, கல்லூரிகளில் தமிழகப் பெண்கள் அழகா, கேரளப் பெண்கள் அழகா என்பது குறித்து செல்லச் சண்டை ஒன்று போய்க்கொண்டிருக்கிறது’ எனக் கூறினார். உண்மையான நிலை இதுதான் என்றாலும், இந்த விவாதத்தால் பெண்கள் மீது மீண்டும் ஒரு தாழ்வு மனப்பான்மை சமுதாயத்தால் ஏற்படுத்தப்படும். இந்த விவாதத்துக்குப் பிறகு, கல்லூரிப் பெண்கள் மேலும், தங்களை மெருகேற்றிக்கொள்வதற்கான வழிகளைத்தான் தேடுவார்கள். இதனால்,சமுதாயத்திற்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது. அதனால், இந்த நிகழ்ச்சியைத் தடை செய்யுங்கள் எனக் கூறினேன்” என்று தங்களுடைய முயற்சியை விரிவாகப் பகிர்ந்துகொள்கிறார் மனோ.

காவல் துறையில் புகார் செய்யும் முடிவை ஏன் எடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு, “ஆண்டனி எங்கள் கோரிக்கைக்கு ஒத்துவருவது மாதிரி தெரியவில்லை. எனவே, 700 பேர் ஆதரவு மற்றும் சில அமைப்புகள் உதவியுடன் காவல் துறை ஆணையருக்குப் புகார் கடிதம் கொடுத்தேன். பெண்களைத் தவறாகச் சித்தரிப்பதற்கு எதிராக 1986ஆம் ஆண்டில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. பெண்ணை பிம்பப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

அதன் அடிப்படையில் புகார் கொடுத்தோம். இந்த விவாதம் பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது எனப் புகாரில் தெரிவித்திருந்தோம். ‘இந்த நிகழ்ச்சியில் பெண்களைத் தவறாகச் சித்தரிப்பது போன்று எதுவும் இல்லை. உங்களுக்கு வேண்டுமென்றால் அதனுடைய காட்சியைக் காட்டுகிறோம்’ என விஜய் டிவி நிர்வாகம் தெரிவித்ததாகக் காவல் துறை ஆணையத்தில் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்படியென்றால், எங்களையும் அந்தக் காட்சியைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறினோம். ஆணையரைச் சந்திக்க முடியாத காரணத்தால் திருநாவுக்கரசர் ஐபிஎஸ் அவர்களைச் சந்தித்து நேரிடையாகப் புகார் அளித்துவிட்டு வந்தோம். இதன் விளைவாக இன்று ஒளிபரப்ப இருந்த அந்த நிகழ்ச்சி நிறுத்திவைக்கப்பட்டது” என்று மனோ தெரிவிக்கிறார்.

நீயா நானா விவாத நிகழ்ச்சியின் இயக்குநர் ஆண்டனி இந்தத் தடை குறித்துத் தன் முகநூல் பக்கத்தில் தன் கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார். “NEW GENERATION சார்ந்த உளவியல் தலைப்புகள் இல்லாத தமிழ் சூழலில் அவர்களின் உலகமான விஜய்-அஜீத், மீம் கிரியேட்டர்கள், பெருகும் ஆண் பையன்களின் மேக்கப், காதலில் சுயமரியாதை போன்ற பல தலைப்புகளில் பேசியுள்ளோம். அந்த வடிவத்தில் எடுக்கப்பட்ட தலைப்பே இன்றைய நீயா நானா” என்று அவர் கூறியுள்ளார்.

கேரளப் பெண்களும், தமிழ்ப் பெண்களும் தங்களின் உடையழகு பற்றியும், நகையழகு பற்றியும், ஆளுமையின் அழகு பற்றியும், அகமும் புறமும் சார்ந்து இந்த விவாதத்தில் பேசினார்கள் என்று கூறும் ஆண்டனி, அவர்களின் குரல் இந்த முறை இடதுசாரிப் பெண்ணியவாதிகளால் நெரிக்கப்பட்டது என்கிறார்.

“கல்லூரிப் பெண்கள் தங்கள் உளவியல் பற்றிப் பேசுவதைக் கேட்கக்கூடப் பொறுமையில்லாமல் இவர்கள் கூச்சலிடுவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பும் ஆண்டனி, ஒரு நிகழ்ச்சி வருவதற்கு முன்பே தடை விதிக்க கோரும் மத அடிப்படைவாதிகளுக்கும், சாதிய அடிப்படைவாதிகளுக்கும், இடதுசாரி அடிப்படைவாதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்றும் கேட்கிறார்.

விவாதம் எப்படி இருந்தாலும் முதலாவதாக, அவர்கள் வைத்துள்ள தலைப்பே மோசமானது என்பதே மனிதி அமைப்பு போன்ற அமைப்புகளின் பார்வை என்பதை மனோ தெளிவுபடுத்துகிறார்.

தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி வரும் காலங்களில் அந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்படுமா என்பது குறித்துத் தெரியவில்லை என்று சொல்லும் மனோ, “அது குறித்து எங்களுக்கு உறுதி எதுவும் அளிக்கவில்லை” எனக் கூறுகிறார்.

ஆண்டனி சொல்வதுபோல, பெண்கள் அழகு குறித்த தங்கள் பார்வையை முன்வைத்துக் கலந்துரையாடுவதுதான் இந்த நிகழ்ச்சி என்றால் அதில் பெரிதாகக் குறைகாண எதுவும் இல்லை. அதே சமயம், யார் அழகு என்று பெண்களின் அழகைப் பொது வெளியில் ஒப்பிட்டுப் பேசுவதில் உள்ள பன்முகச் சிக்கல்களையும் புறக்கணித்துவிட முடியாது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி வேறு தலைப்பில் ஒளிபரப்பாவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon