மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 21 பிப் 2020

சேலம் தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்!

சேலம் தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்!

சேலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக தொடரும் உயிரிழப்புகளால் தமிழக மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். முக்கியமாக சேலத்தில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்று (அக் 22) மட்டும் மூன்று வயதுக் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் என அனைவரும் டெங்கு கொசு உருவாகக் காரணமாக இருக்கும் நிலத்தின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பணியில் இறங்கியுள்ளனர். குப்பைகளை நீண்ட நாட்களாக அப்புறப்படுத்தாமல் போடப்பட்டிருக்கும் பகுதியில் சோதனை தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம், சாரதா கல்லூரி சாலையில் உள்ள சண்முகா மருத்துவமனை யில் இன்று மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையிலான சுகாதார குழுவினர் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் டெங்கு புழுக்களும் , பாம்பும் இருப்பது தெரியவந்துள்ளது. சுத்தத்தை கடைப்பிடிக்காமல் டெங்குவை பரப்பும் வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்ததால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மருத்துவமனையின் அருகிலேயே மருத்துவ கழிவுகள் அகற்றாமல் இருந்ததற்கு மேலும் ரூ.5 லட்சம் என ரூ.10 லட்சம் அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பின்னர், சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ், சண்முகா மருத்துவமனை உரிமையாளர் பன்னீர்செல்வத்திடம், சுகாதார சீர்கேடு குறித்து விசாரணை நடத்தினார்.

இதுபோன்று, சேலத்தில், நேற்று(அக் 21) மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தியதில் டெங்குவை பரப்பும் வகையில் சுகாதாரமற்று இருந்த 18 இடங்களில், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், ரூ.56 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுதவிர டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்த பெரம்பலூர் ஆவின் நிர்வாகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளியில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது தூய்மையற்ற நிலையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்த அப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon