மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

அதிமுகவில் இன்னும் மனக்கசப்பு உள்ளது : கே.பி.முனுசாமி

அதிமுகவில் இன்னும் மனக்கசப்பு உள்ளது : கே.பி.முனுசாமி

ஒன்றிணைந்த அதிமுகவில், கீழ்மட்டத்தில் உள்ளவர்களிடம் சில மனக்கசப்புகள் உள்ளன. அவை விரைவில் நீங்கிவிடும் என்று ஒருங்கிணைந்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது. விசாரணையில் கலந்துகொள்வதற்காக ஒருங்கிணைந்த அணியில் பன்னீர் ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இன்று (அக்டோபர் 22) டெல்லி சென்றுள்ளனர்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி," இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை தள்ளிப் போடுவதற்காகவும், எங்கள் தரப்புக்கு சின்னம் கிடைக்க கூடாது என்பதற்காகவும் போலியான பிரமாணப் பத்திரங்களை சசிகலா தரப்பிலிருந்து சமர்ப்பித்துள்ளனர். அது கடந்த விசாரணையிலேயே தெளிவாக தெரிந்துவிட்டது.

சமாஜ்வாதி கட்சியில் நடைபெற்ற சின்னம் தொடர்பான விசாரணையில் முலாயம் சிங் பிரமாண பத்திரங்களை சமர்ப்பிக்காமல் ஒதுங்கிவிட்டார். அதுபோல சசிகலா தரப்பினர் ஆவணங்களை தாக்கல் செய்திருந்தாலும் கூட, அவை போலி என்ற காரணத்தினால் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைப்பது உறுதி" என்றார்.

மேலும்,"நாங்கள் பிரிந்தபோது வைத்த கோரிக்கைகளை எடப்பாடி தரப்பினர் ஏற்றதால், ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்காக இணைந்தோம். அதன்பிறகு நூற்றாண்டு விழா, அதிமுக தொடக்க விழா இரண்டிலும் தலைமை நிலையில் இருந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாவட்டங்களில் நடைபெற்ற விழாவில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கலந்துகொண்டனர். மற்ற நிகழ்வுகளில் கீழ்மட்ட தொண்டர்கள் கலந்துகொண்டிருந்தாலும் கூட, அவர்களிடம் குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் சண்டையைப் போல சில மனக்கசப்புகள் உள்ளன. அவை விரைவில் நீங்கிவிடும், அப்போது நீங்கள் எதிர்பார்க்கும் மாயை நீங்கும், ஒற்றுமையாக இந்த இயக்கம் செயல்படும்" என்று தெரிவித்தார்.

ஞாயிறு, 22 அக் 2017

அடுத்ததுchevronRight icon