மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

கொங்கில் பிராட்டியின் திருவடி பக்தி !

 கொங்கில் பிராட்டியின் திருவடி பக்தி !

ராமானுஜர் தனது சிஷ்ய பரிவாரத்தோடு நீலகிரி மலையில் சத்தியமங்கலம் வழியாகக் கடந்து சென்றுகொண்டிருக்கிறார். பழங்களைப் பறித்து சாப்பிட்டு சில நாட்கள் பசியாறினார்கள்.

ஆனால் வேடர்களோடு ஆறுநாட்கள் பயணப்பட்டாகிவிட்டது. சிஷ்யர்களுக்கு அமுது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அப்போதுதான் வேடர்கள் கொங்கில் பிராட்டி என்ற மூதாட்டியின் வீட்டில் ராமானுஜரையும், சிஷ்யர்களையும் கொண்டு போய் விட்டார்கள்.

துறவிகள் யார் வீட்டிலும் சாப்பிட மாட்டார்கள். பிச்சை எடுத்தால் கூட அதற்கென்று சில வரம்புகள் வைத்திருப்பார்கள். அதுவும் ராமானுஜருக்கு திருவரங்கத்தில் உணவில் விஷம் வைத்து கொல்ல முயற்சி நடந்ததில் இருந்து அவருக்கென்று கிடாம்பி ஆச்சான் என்ற சிஷ்யர்தான் சமையல் பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் மலைப் பள்ளத் தாக்குகளில் பயணப்பட்டு கொங்கில் பிராட்டியின் வீட்டை அடைந்தார்கள் ராமானுஜரும் அவரது சிஷ்யர்களும்.

இந்த வீட்டில் சாப்பிடலாமா என்று ராமானுஜர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அந்த குறிப்பை உணர்ந்தவராக கொங்கில் பிராட்டி பேசியதைக் கேட்டதும்தான் ராமானுஜர் உள்ளிட்ட சிஷ்யர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

’என் கையால் சாப்பிடலாமா என்று சந்தேகப்பட வேண்டாம். நான் யார் தெரியுமா? திருவரங்கத்தில் இருக்கும் ராமானுஜ ஆச்சாரியரின் சிஷ்யைதான் நான். எனவே என் கையால் வைணவர்களாகிய தாங்கள் சாப்பிட எந்த தடையும் இல்லை. இது உங்கள் ஆச்சாரத்துக்கு பொருந்தி வரக் கூடியதுதான். வருந்த வேண்டாம்’ என்று சொன்னதும்தான் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

தன் இல்லம் தேடி வந்தது ராமானுஜர் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. கொங்கில் பிராட்டியின் இந்த வாக்கைக் கேட்டதும் ராமானுஜ சிஷ்யர் ஒருவர், ‘’ஏனம்மா... நீ ராமானுஜருடைய சிஷ்யையா நீ அவரைப் பார்த்திருக்கிறாயா? எதை வைத்து நீ சொல்வதை நாங்கள் நம்புவது?’ என்று கேட்கிறார்.

அப்போதுதான் தனது திருவரங்கப் பயணத்தைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

’’நான் கொங்கு நாட்டைச் சேர்ந்தவள் என் இயற்பெயர் சுமதி. எங்கள் ஊரில் வறட்சியும் என் குடும்பத்தில் நிம்மதிக்கு வறட்சியும் ஏற்பட்டதால் என்ன செய்யலாம் என்று தெரியாமல் புலம்பியபோதுதான் திருவரங்கம் சென்று அங்கே ராமானுஜர் என்றொரு ஆச்சாரியர் இருக்கிறார்., அவரைச் சரணைடையுங்கள் என்று சிலர் சொன்னார்கள்.

அதைக் கேட்டு நானும் திருவரங்கம் சென்றோம். அங்கே கோயில் வாசலிலேயே தங்கினோம். சில மாட மாளிகைகள் யாருமில்லாமல் இருந்தன. அங்கே தங்கினோம். அப்போதுதான் வீதியில் ராமானுஜர் வருவதைப் பார்த்தேன். அவரைப் பார்த்து எல்லாரும் வணங்கினார்கள். அவரிடம் மிகவும் பவ்யமாக நடந்துகொண்டார்கள். அதைக் கண்டு எனக்கு ஆச்சரியம். நான் கீழே இறங்கி எல்லாரிடமும் விசாரிக்கையில், அரங்கனை விட எமக்கு ஆச்சாரியரே முக்கியம் என்று கூறினார்கள்.

இவ்வளவு செல்வாக்கு இருந்தும், மரியாதை இருந்தும் ராமானுஜர் தினந்தோறும் வீடுகளில் பிச்சை எடுத்துதான் தனது உணவைத் தேடிக் கொண்டார். அரங்கனைவிட இவரே முக்கியமாக இருக்கும்போது இவர் ஏன் இப்படி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று எங்களுக்குத் தோன்றியது.

எனக்குத் தோன்றிய இந்த சந்தேகத்தை நான் ராமானுஜரிடமே கேட்டுவிட்டேன்.

‘அம்மா, ஏன் என்னை அவர்கள் மதிக்கிறார்கள். பகவத் விஷயமுள்ள ஸாரமான மந்திரத்தை நான் அவர்களுக்கு உபதேசித்திருக்கிறேன். அதனால் அவர்கள் தங்கள் நன்றியை இப்படி எனக்குத் தெரிவிக்கலாம் நான் அவர்களுக்கு உபதேசித்திருக்கிறேன். அதில் அவர்கள் திருப்தி அடைந்து இருக்கலாம்' என்று கூறினார்.

நான் உடனே, ‘ஆசாரியரே... நான் தங்களையே சரண் புகுந்துள்ளேன். எனக்கும் அந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும்’ என்று கேட்டேன். ராமானுஜரும் சில நாட்கள் எனது சிரத்தையை சோதித்து பின் எனக்கு குருபரம்பரை உபதேசித்து, அதற்குப் பின் த்வயத்தையும் உபதேசித்தார்.

அவற்றை மிக சந்தோஷமாக ஏற்றுக் கொண்ட நான்... ‘ஆச்சாரியரே நான் எனது சொந்த ஊருக்குப் போகிறேன். நான் வாழ்நாள் முழுதும் வழிபடுவதற்காக உங்கள் பாதுகைகளைத் தர வேண்டும்’ என்று அவரது திருவடிகளில் வீழ்ந்தேன். அவர் தனது புனிதமான பாதுகைகளையும் எனக்கு வழங்கினார்.

சுமதியாகிய என்னை கொங்கில் பிராட்டி என்று அழைத்து ஆசீர்வதித்து அனுப்பினார்’ என்று விரிவாக தனது திருவரங்க அனுபவத்தை விரித்துரைத்த கொங்கில் பிராட்டி கூற ராமானுஜருக்கு எல்லாம் நினைவுக்கு வந்தது.

உள்ளே சென்ற கொங்கில் பிராட்டி ராமானுஜர் அன்று தமக்கு அளித்த அவரது பாதுகைகளை அதாவது மரத்தால் ஆன காலணிகளை எடுத்து வந்து காட்டினார். அன்று முதல் இன்று வரை நான் ராமானுஜரின் பாதுகளைகளைதான் வழிபட்டு வருகிறேன் என்று கொங்கில் பிராட்டி கூற கூற ராமானுஜருக்கு ஒரு யோசனை தோன்றியது.

தனது சிஷ்யர் ஒருவரை அழைத்து காதில் ஏதோ கூறினார்., பின்

அந்த சிஷ்யர் கொங்கில் பிராட்டியிடம், ‘ பிராட்டியாரே... ராமானுஜரைதான் தாங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களே... இதோ இங்கே இருக்கும் வைணவர்கள் ராமானுஜர் போல யாரேனும் இருக்கிறார்களா பார்த்துச் சொல்லுங்கள்’ என்று கேட்டார்.

கொங்கில் பிராட்டி சிரித்துக் கொண்டே முகம் பார்க்க கூட வேண்டாம் சுவாமி... என் ஆச்சாரியரின் திருவடியை தினந்தோறும் திருவரங்கத்தில் சேவித்தேன். அங்கிருந்து புறப்பட்டு வந்தபின், அவரது திருப் பாதுகைகளையே சேவித்து வருகிறேன். எனவே திருவடிகளைப் பார்த்தே நான் சொல்லிவிடுவேன் ராமானுஜர் யார் என்று.’ என்றாள் கொங்கில் பிராட்டி.

அனைவரும் ஒரு கணம் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். அப்புறம் என்ன நடந்தது?

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பில் வைணவச் செம்மல் ஜெகத்ரட்சகன் அவர்கள் ஆற்றி வரும் வைணவப் பணி உலகமெங்கும் பரவி வருகிறது. அவரது பாசுரப் பரப்புப் பணி தொடரட்டும்!

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon