மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

வேப்பம்பூ சூப் - கிச்சன் கீர்த்தனா

வேப்பம்பூ சூப் - கிச்சன் கீர்த்தனா

“எல்லா பூவும் இந்தக் கடையில கிடைக்குதே, இந்த ‘சூப்பூ’ மட்டும் ஏன் விக்க மாட்டேங்க்குறாங்க?”என்ற ஏழு வயது சிறுமிக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினாலும், சமாளித்தபோதுதான் ‘அடடே ஒரு ஆரோக்கியமான சூப் ஒன்றை செய்வோமே’ என்று தோன்றியது. செய்வோமா...

வேப்பம்பூ சூப்:

வேப்பம் பூ - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், காய்கறி வேகவைத்த தண்ணீர் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன், உப்பு , மிளகுத்தூள் - தேவையான அளவு.

செய்முறை:

வேப்பம்பூவைச் சுத்தம் செய்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருக்கியதும் வேப்பம்பூ சேர்த்து வறுக்கவும்.

அடுத்து அதனுடன் பனங்கற்கண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும். பிறகு இறக்கி வடிகட்டவும்.

இதனுடன் காய்கறி வேகவைத்த தண்ணீர், எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பருகலாம்.

துளிகூட கசப்பே தெரியாது. வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். மாதம் ஒரு முறை சாப்பிட்டால்கூட போதுமானது.

கீர்த்தனா தத்துவம்:

முத்தம் கேட்டால்கூட யோசிக்காமல் தருகிறார்கள்... கொஞ்சம் முறுக்குக் கேட்டால் நிதானமாக யோசித்தபின் தருகிறார்கள் குழந்தைகள்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon