மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்!

மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்!

சிறு, குறு தொழிற்சாலைகள் தொடர்ந்து தங்கு தடையின்றி நடைபெற மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (அக்டோபர் 22) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் நாடு வளர்ச்சி பெற சிறு, குறு தொழில்களின் பங்கும் மிக முக்கியமான ஒன்று. எனவே சிறு, குறு தொழில் புரிய முன்வருவோருக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் தொழிலுக்குக் கடன் உதவி, இடவசதி போன்றவற்றை செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உட்பட பல்வேறு காரணங்களால் ஏற்கெனவே நடைபெற்று வருகின்ற சிறு, குறு தொழில்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் இத்தொழில் நடத்துபவர்கள் மற்றும் இத்தொழில்களில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், தொழிலாளர்கள் என லட்சக்கணக்கானோர் தொழிலில் முழுமையாக ஈடுபட முடியவில்லை.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2015-16 ஆம் ஆண்டில் பல்வேறு தொழிற்சாலைகளில் நடைபெறும் தொழில்களுக்கு 29,323 மில்லியன் யூனிட்ஸ் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. மேலும் 2016 - 17ஆம் ஆண்டில் 31,040 மில்லியன் யூனிட்ஸ் மின்சாரம் தேவையாக இருந்தது. 2015-16ஐ ஒப்பிடும்போது 2016-17இல் 1,717 மில்லியன் யூனிட்ஸ் மின்சாரம் அதிகமாக தேவைப்பட்டது.

ஆனால், ஒரு குறிப்பிட்ட பிரிவில் உள்ள பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள், ஜவுளித்தொழில், டீ எஸ்டேட், மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு 2016-17இல் 11,572 மில்லியன் யூனிட்ஸ் மின்சாரம் தேவைப்பட்டது. ஆனால், 8,846 மில்லியன் யூனிட்ஸ் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதாவது 2,727 மில்லியன் யூனிட்ஸ் மின்சாரம் பயன்படுத்தப்படுத்த முடியவில்லை. இதற்குக் காரணம் தொழில்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு. மேலும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலையும் ரூ.11.62 ஆக இருக்கிறது.

இவ்வாறு மின்சாரம் பயன்படுத்த முடியாத சூழலில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு 2016-17இல் சுமார் ரூ.3,783 கோடி இழப்பு ஏற்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்ல மின்சார உற்பத்திக்கு வெளி மாநிலங்களில் இருந்து வருகின்ற நிலக்கரியும் வந்து சேர குறைந்தது 10 நாள்கள் ஆகிறது. இதனால் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் சற்று காலதாமதமாகிறது. எனவே நிலக்கரியை விரைவாக இறக்குமதி செய்து மின் உற்பத்தியை பெருக்கிட வேண்டும்.

மேலும், தமிழக அரசு மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகள் குறிப்பாக சிறு, குறு தொழிற்சாலைகள் தொடர்ந்து தங்கு, தடையின்றி நடைபெற மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தும், மின்சாரம் தொடர்ந்து வழங்கிடவும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் செய்தும், தொழிற்தொடங்க சலுகைகள் வழங்கியும் தொழில்களை ஊக்கப்படுத்திட வேண்டும்” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon