மின்னம்பலம்
இந்தியச் சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று (அக்டோபர் 22) நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் ட்ரென்ட் போல்ட் வேகத்தில் வெளியேறினர். அதன் பிறகு களமிறங்கிய கேப்டன்
விராட் கோலி பொறுப்புடன் விளையாடித் தனது 200ஆவது போட்டியில் சதமடித்து அசத்தினார். அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் குவித்தது.
281 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில், காலின் முன்ரோ ஜோடி சிறப்பான தொடக்கம் தந்தனர். 10ஆவது ஓவரில் முன்ரோ 28 ரன்களில், பும்ரா பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 6 ரன்களில் குல்தீப் சுழலில் சிக்கினார். அவரைத் தொடர்ந்து கப்டிலும் 32 ரன்களில் வெளியேற நியூசிலாந்து அணி 80 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்துத் தடுமாறியது. அப்போது ராஸ் டெய்லருடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார்.
முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பிறகு அதிரடிக்கு மாறியது. இந்தியப் பந்து வீச்சைச் சிதறடித்து இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த ஜோடியைப் பிரிக்க கோலி எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. சிறப்பாக ஆடிய லாதம் 95 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து டெய்லர் 95 ரன்களில், சதமடிக்கும் நோக்கில் புவனேஸ்வரின் பந்தைத் தூக்கி அடிக்க அந்தப் பந்து கேட்ச் ஆனது. அவரையடுத்துக் களமிறங்கிய ஹென்றி நிக்கோலஸ் பவுண்டரி அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. லாதம் 103 ரன்களுடனும், நிக்கோலஸ் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.