மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 அக் 2017

விமர்சனம்: மேயாத மான்!

விமர்சனம்: மேயாத மான்!

தமிழ் சினிமாவில் அதிகம் பார்த்துப் பழகிப்போன ஒருதலைக் காதலையே வித்தியாசமான அணுகுமுறையுடன் காமெடி கலந்து உருவாக்கியிருக்கும் படம் மேயாத மான். அறிமுக இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

‘இதயம்’முரளி (வைபவ்), சம்பந்தப்பட்ட பெண்ணுக்கே தெரியாமல் கல்லூரியில் மூன்று வருடங்கள் காதலித்துவிட்டு அதன் பின்னரும் அதையே நினைத்து குடித்து, தற்கொலைக்கு முயற்சித்து வருவதையே தொழிலாகக் கொண்டவர். அவர் நடத்தும் மியூசிக் பார்ட்டி வேலை இரண்டாம்பட்சம்தான். அவருக்கு உதவ இரண்டு நண்பர்கள். நண்பர்கள் என்றால் கூடவே இருந்துகொண்டு கலாய்ப்பதில் மட்டுமில்லாமல் உண்மையான பாசத்தோடு உடன் நிற்கிறார்கள். நண்பனுக்காகப் பல இடங்களில் மனமுவந்து மொக்கை வாங்கிக்கொள்பவர்களாகவும் இருக்கின்றனர்.

வினோத் (விவேக் பிரசன்னா) அதில் ரொம்பவே ஸ்பெஷல். வழக்கமாக செத்துவிடுவேன் என்று மிரட்டும் முரளி, ஒருகட்டத்தில் அதில் மிகவும் சீரியஸாக இறங்கிவிட அவன் மனதை மாற்ற, அவன் காதலிக்கும் மதுமிதா (ப்ரியா பவானி சங்கர்) வீட்டுக்கு அவளுக்குத் திருமணம் நிச்சயமான அன்றிரவே நண்பர்கள் இருவரும் செல்கின்றனர். அவளை முரளியிடம் போனில் பேசவைத்துத் தற்கொலையைத் தடுக்கின்றனர். மதுமிதா பேசிய பேச்சு முரளியின் மனதில் ‘கெட்ட பொண்ணு’ என்ற எண்ண வைக்கிறது. இப்படி ஒருவன் தன்னைக் காதலிக்கிறானா என்று மதுமிதா தன் திருமணத்தை ஒரு வருடம் தள்ளிப்போட வைக்கிறது. அதன்பின் அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் கதை.

படத்தின் இந்தக் கதையோடு மிக இயல்பாக ரசிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருப்பது வைபவ் தங்கையின் காதல்தான். நகைச்சுவையை உண்டுபண்ணும் தருணங்கள் திரைக்கதையோடு இணைந்து உருவாகியுள்ளன. வசனங்களும் படத்துக்குப் பக்கபலமாக இருக்கின்றன. மேல் தட்டைச் சேர்ந்த கதாநாயகியின் வீட்டுக்குச் செல்லும் கதாநாயகனுக்கு அங்கு அவமானம் ஏற்பட்டால் பஞ்ச் வசனங்கள் பேசி சவால் விட்டுவரும் காட்சியையே தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் பார்த்துப் பழகிப் போயிருப்பார்கள். இதைக் கலாய்க்கும் விதமாக முரளி கதாபாத்திரம் (அவரைப் பொறுத்தவரை இயல்பாக) சின்ன வசனத்தின் மூலம் கடந்து செல்லும்போது அரங்கம் சிரிப்பலையில் அதிர்கிறது.

படத்தின் இறுதிப்பகுதியில் ‘எம்மா பிரியங்கா, பிள்ளையை நல்லா வளர்த்துருக்கம்மா’ என்ற வசனத்தை அரங்கம் கைதட்டிக் கொண்டாடுகிறது. என்ன இந்த வசனத்தில் இருக்கிறது என்று கேட்டால் அதற்கு முந்தைய காட்சியைப் பார்த்தால்தான் புரியும். இப்படி படம் முழுக்க டைமிங் காமெடி நன்றாக வந்துள்ளது.

வெகுளியான கதாநாயகன் என்றால் எந்த அளவுக்கு? சில நேரங்களில் ப்ரியாவின் குடும்பத்தினரின் செயல்கள் எல்லை மீறிச் செல்லும்போதும் அதுபற்றி ஒன்றுமே தெரியாததுபோல் வைபவ் நடந்துகொள்வது அயர்ச்சியைத் தருகிறது. வில்லனைப் போல என்ட்ரி கொடுக்கும் ப்ரியாவின் அண்ணன் கதாபாத்திரம் அந்தக் காட்சிக்குப் பின் காணாமல் போய்விடுகிறது. ப்ரியா திருமணத்தை ஒரு வருடம் தள்ளிப்போடுவதற்கோ, அதன்பின் காதல் வயப்படுவதற்கோ சரியான காரணங்கள் காட்டப்படவில்லை.

காதலிலிருந்து எல்லாம் சரியாகிவிட்ட பின்பு வைபவ்வின் கோபமான வார்த்தைகள் பிளவை உண்டுபண்ணுகின்றன. அதன் பின்னால் கதையை இழுக்க முயற்சிக்கும் விதமாகச் சில காட்சிகள் வைக்கப்பட்டாலும் அவற்றை ரசிக்கும்படியாக அமைந்திருப்பதால் திரையரங்கிலிருந்து வெளியே வரும்போது நிறைவாக உள்ளது.

வெகுளியான கதாநாயகனாக வலம்வரும் வைபவ் ரசிக்கும்படியான நடிப்பால் அமர்க்களப்படுத்தியுள்ளார். அவர் செய்யும் அட்டகாசங்கள் அரங்கத்தில் சிரிப்பலையை ஏற்படுத்துகின்றன. அவரையும்விட விவேக் பிரசன்னாவுக்கு காமெடி, நட்பு, பாசம் என பல்வேறு உணர்ச்சிகளை வெளிக்காட்டும் விதமான கதாபாத்திரம் அமைந்துள்ளது. அதை அவர் திறமையாகக் கையாண்டுள்ளார். பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் வலம்வந்த அவருக்கு இந்தப் படம் முக்கியமான திருப்பமாக இருக்கும். சின்னத் திரையிலிருந்து வந்திருக்கும் ப்ரியா தமிழ் சினிமாவுக்கு நல்ல புதுவரவு.

படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள். ஆனால், அவை கதையின் வேகத்தைக் குறைக்காமல் படத்தின் காட்சிகளாக நகர்ந்து செல்கின்றன. எங்க வீட்டு குத்துவிளக்கே, தங்கச்சி பாடல், ப்ரியங்கா அட்ரஸ் பாடல் ஆகியவை ஆட்டம் போட வைக்கும் ரகத்தில் உள்ளன. சந்தோஷ் நாராயணனும் பிரதீப்பும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

வைபவ் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் விது அய்யனா அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். படத்தின் பட்ஜெட் அதிகமாகிவிடக் கூடாது என்பதற்காக அதிக குளோசப் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளனவோ என்று தோன்றுமளவுக்கு நிறைய காட்சிகளில் குளோசப் கையாளப்பட்டுள்ளது.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 23 அக் 2017