மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

எச்.ராஜாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

எச்.ராஜாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

நடிகர் விஜய்யின் மதத்தைக் குறிப்பிட்டு ‘ஜோசப் விஜய்’ என்று விமர்சித்த பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் நடிகர் பார்த்திபனும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படத்துக்கு பாஜக தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மெர்சல் படத்தை இணையதளத்தில் பார்த்ததாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்திருந்தார். இது குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் நேற்று முன்தினம் (அக்டோபர் 21) தன் ட்விட்டர் பக்கத்தில், “கட்சிக்காரர்களின் நெரிசல் காரணமாக மெர்சல் காணவில்லை. முட்டிமோ(டி)தி பார்க்க வைத்துவிடுவார்களோ? வெற்றிக்கு நன்றி சொல்ல டெல்லி விஜய்யம்!” என்றும் “மரியாதைக்குரிய எச்.ராஜா அவர்களுக்குரிய மரியாதையை குறைக்க வேண்டும். அவர் களவாடி(யாய்) மெர்சல் கண்டிருந்தால்..!” என்றும் “நான் எல்லோருக்கும் நண்பன்! ஆனால், சினிமாவைத் திருடி பிழைப்பவர்களுக்கும் அதில் கண்டு களிப்பவர்களுக்கும் மூர்க்க எதிரி!” என்றும் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் நடிகையும் தணிக்கைக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான நடிகை கெளதமி நேற்று முன்தினம் (அக்டோபர் 21) தன் ட்விட்டர் பக்கத்தில் “மெர்சல் படத்தை நான் பார்த்தேன். ஜி.எஸ்.டி. டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட சில விஷயங்களைத் தப்பாக எடுத்துக்கொள்ள எனக்கு அவ்வளவு பெரிய காரணம் எதுவும் தெரியவில்லை. எனக்கு இந்தப் படத்தில் அடிப்படையான ஒரு விஷயம் மட்டுமல்லாமல் ரொம்ப ஆழமாக தெரியும் விஷயம் என்னவென்றால் நமக்குத் தரமான மருத்துவம் தேவை. கதை அதை வலியுறுத்துவதால் மெர்சல் படம் என்னை கவர்ந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சாந்தனு பாக்யராஜ் (அக்டோபர் 20) தன் ட்விட்டர் பக்கத்தில், “இளையதளபதி விஜய்யைத் தற்போது ஜோசப் விஜய் என்று கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. பிரச்னைக்கு முடிவு கிடைக்கலேன்னா, இதுதான் தீர்வா? ரொம்ப கேவலம். மெர்சல் மறுபடியும் சென்சார் செய்யப்படுவது ஜனநாயக நாட்டில் வாழும் நம் அனைவருக்கும் வெட்கம். அந்த மனுஷனை விடுங்கப்பா, ஆ ஊன்னா அவரு படத்தை கொக்கி போட்றீங்க” என்று தெரிவித்துள்ளார்

நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என மெர்சல் படத்துக்கு ஆதரவாகவும் எச்.ராஜாவுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon