மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

என்மீது வழக்கு போடுவார்களா: முதல்வர்!

என்மீது வழக்கு போடுவார்களா: முதல்வர்!

‘ஜி.எஸ்.டியால் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் திரைப்படங்களில் வரும் வசனங்கள் குறித்து பாஜக அரசால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஜி.எஸ்.டியை நானும்தான் எதிர்க்கிறேன் என்மீதும் வழக்கு போடுவார்களா?’ என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதுவை சட்டப்பேரவையில் நேற்று (அக்டோபர் 22) செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “பாஜக ஆட்சியில் பத்திரிகை, ஊடகம், திரைத்துறை சுதந்திரம் கேள்விக்குறியாகி விட்டது. இச்சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளது என்பது மெர்சல் திரைப்பட விவகாரத்தில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

மேலும், ஜி.எஸ்.டியால் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் திரைப்படங்களில் வரும் வசனங்கள் குறித்து பாஜக அரசால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஜி.எஸ்.டியை நானும்தான் எதிர்க்கிறேன் என்மீதும் வழக்கு போடுவார்களா?

இணையதளங்களில் புதிய திரைப்படங்களை வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஹெச்.ராஜா இணையதளத்தில் மெர்சல் திரைப்படம் பார்த்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் திரைப்படம் பார்க்கும் வழக்கம் இல்லை. கருத்து சுதந்திரத்துக்கு எதிராக பாஜக செயல்பட தொடங்கியதாலும், ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினர் என்பதால் பல விஷயங்களை நான் எதிர்த்துள்ளேன் என்பதாலும் இக்கருத்தைத் தெரிவித்தேன்” என்று அவர் தெரிவித்தார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon