மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 அக் 2017

ஒரு பொம்மலாட்டத்தின் கதை - 13

ஒரு பொம்மலாட்டத்தின் கதை - 13

ஆரா

மூச்சுக்கு மூவாயிரம் முறை ‘அம்மா அரசு, அம்மா அரசு’ என்று இப்போதைய அரசை அழைத்துக்கொள்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அம்மா அரசுக்கும், இப்போது இருக்கக்கூடிய சும்மா அரசுக்கும் இடையிலான வித்தியாசத்தை நமக்கு மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது ஜி.எஸ்.டி.

ஜி.எஸ்.டி. பற்றி மெர்சல் படத்தில் வரும் சில நொடி வசனத்துக்கே இவ்வளவு அலப்பறை பண்ணுகிற பாஜகவினர் அன்று இந்தியாவிலேயே ஜி.எஸ்.டியைத் தொடர்ந்து எதிர்த்தவர்களில் முதலிடம் பெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் எதிர்ப்புக்கு என்ன மதிப்பு கொடுத்தார்கள்?

கடனில் இருக்கக்கூடிய மாநில அரசின் கஜானாவைக் காக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உண்டு. அந்த வகையில்தான் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் ஜி.எஸ்.டி.யை எதிர்த்துக் குரல் கொடுத்தார். மாநிலங்களின் வரி வருவாயைச் சுரண்டி அதை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் ஜி.எஸ்.டி.யை ஜெயலலிதா எதிர்த்தார்.

இதுபற்றி அப்போதைய பிரதமர் மோடிக்கு நேரடியாகவே கோரிக்கை விடுத்தார். கடிதம் மூலமாகவும் ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்தார். தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி.க்கு எதிராகப் பேசவைத்தார்.

ஆனாலும் பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் வேண்டுகோளையோ, எதிர்ப்பையோ காதில் போட்டுக்கொண்டது மாதிரியே தெரியவில்லை. ஜெயலலிதா என்ற தனி நபர் ஜி.எஸ்.டி.யை எதிர்க்கவில்லை. ஏழு கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலத்தின் அரசு பிரதிநிதியாக, மாநிலங்களின் பொருளாதார ஆளுமையை நிலைநிறுத்தும் ஒரு போராட்டத்தின் வடிவமாகவே ஜி.எஸ்.டி. என்னும் ஒருமுகப்படுத்தப்பட்ட வரி வடிவத்தை ஜெயலலிதா எதிர்த்தார்.

இதிலும் மத்திய அரசின் ஆற்றலையும் அவர் உணர்ந்திருந்தார். அதனால்தான் ஜி.எஸ்.டி. மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் முன்னமே, மாநிலங்களின் சார்பில் குறிப்பாக தமிழ்நாட்டின் சார்பிலான கோரிக்கைகளை அவர் வலிமையாக முன்வைத்தார்.

‘பிரதமர் மோடியும் குஜராத் என்ற மாநிலத்தின் முதல்வராக இருந்தவர்தான். எனவே, அவருக்கு மாநிலங்களின் வரி வருவாய் உள்ளிட்ட விஷயங்கள் தெரியும்’ என்று சொல்லியிருந்தார் ஜெயலலிதா.

ஆனால், ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்த மோடிக்கு, மாநில முதல்வராக ஜெயலலிதா வைத்த கோரிக்கைகள் எதுவும் ஒரு பொருட்டாகவே படவில்லை என்பதுதான் காலக் கொடுமை.

இந்த நிலையில்தான் கடந்த 2016ஆம் வருடம் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஜி.எஸ்.டி. மசோதா முதலில் மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தது.

அரசின் நிலைப்பாட்டை விளக்கிப் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “இந்த ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றத்தால், நாடாளுமன்றமோ அல்லது மாநிலங்களோ தங்கள் அதிகாரங்களை இழந்துவிடவில்லை. ஜி.எஸ்.டி. மூலம் இறையாண்மை என்பது ஒன்று குவிக்கப்பட்ட நிலையில், அனைவராலும் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கும். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மது, பெட்ரோலியப் பொருள்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. பெட்ரோலியப் பொருள்களைப் பொறுத்தவரை, அவை இருந்தாலும், பூஜ்ஜியம் சதவிகிதம் வரியே இருக்கும். ஜி.எஸ்.டி. கவுன்சில் ஜனநாயக முறைப்படி செயல்படும்” என்றும், “அதில் மூன்றில் இரண்டு பங்கு வாக்களிக்கும் உரிமை மாநிலங்களுக்கும் ஒரு பங்கு உரிமை மத்திய அரசுக்கும் வழங்கப்படும்” என்றார் நிதியமைச்சர்.

ஜி.எஸ்.டி. மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் குரலாக நாடாளுமன்றத்தில் முழங்கினார் நவநீதகிருஷ்ணன் எம்.பி.

“இந்த மசோதாவில் தமிழக முதல்வர் அவர்கள் கொண்டுவந்த திருத்தங்கள் இடம்பெறவே இல்லை. இந்தச் சட்டத்தைக் கொண்டுவர நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. இது, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது” என்று கூறினார்.

அப்போதுகூட தமிழகத்தின் குரல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் ஜி.எஸ்.டி. மசோதா மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

மசோதாவுக்கு ஆதரவாக 203 வாக்குகள் பதிவாகின. எதிர்ப்பாக ஒரு வாக்கும் பதிவாகவில்லை. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்குத் தாங்கள் தெரிவித்த ஆட்சேபணைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கூறி எதிர்த்து வெளிநடப்பு செய்தனர்.

ஜி.எஸ்.டி.யை எதிர்த்து மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்தது அம்மா அரசு. அன்று இந்த மசோதா மாநிலங்களவையில் வென்றாலும் கடைசி வரை எதிர்த்துக் குரல் கொடுத்த ஜனநாயக இயக்கமாக அகில இந்திய அளவிலே பார்க்கப்பட்டது அதிமுக.

காரணம், ஜெயலலிதா என்ற தமிழக முதல்வரின் எதிர்ப்பு. அகில இந்திய அளவில் மாநில சுயாட்சி என்ற குரல் ஒலித்தால் அது தமிழ்நாடாகத்தான் இருக்கும் என்பதே வரலாறு. அதேமாதிரி ஜி.எஸ்.டி.க்கும் தனது எதிர்ப்பை மாநிலங்களவையில் பதிவு செய்தார் ஜெயலலிதா.

மக்களவையில்..?

(அடுத்த ஆட்டம் புதன் அன்று)

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

திங்கள் 23 அக் 2017