முரசொலி பவள விழா கண்காட்சி அரங்கை சில நாள்களுக்கு முன்பு பார்வையிட்ட திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, விரைவில் அண்ணா அறிவாலயத்துக்கு வரவுள்ளதாக திமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். இடைப்பட்ட காலங்களில் காவேரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றதைவிட வேறெந்த பொது இடத்துக்கும் அவர் செல்லவில்லை. கடந்த ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளில் கருணாநிதியின் முதல் குழந்தை என்று கூறப்படும் முரசொலியின் பவள விழா நிகழ்வு நடைபெற்றது. ஆனால், உடல்நலன் காரணம் காட்டி கருணாநிதி அதில் கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தொண்டர்கள் உற்சாகமிழந்தனர்.
இந்த நிலையில் வீட்டில் ஓய்வெடுத்துவந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த 19ஆம் தேதி திடீரென கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அலுவலகத்துக்குச் சென்று, பவள விழா கண்காட்சியைப் பார்வையிட்டார். இது தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதியிலுள்ள பள்ளிகளுக்குக் கொடுக்க ரூ.10 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை, கடந்த 21ஆம் தேதி சீதை பதிப்பகத்தினர் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை நேரில் சந்தித்து வழங்கினர். நிகழ்வில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த நிலையில், கருணாநிதியின் அடுத்த விசிட் அறிவாலயமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி வெளியூர் பயணங்களைத் தவிர மற்ற நேரங்களில் தினந்தோறும் அண்ணா அறிவாலயத்துக்குச் சென்று பணிகளைக் கவனித்துவிட்டு வருவார் கருணாநிதி. இந்த வழக்கம் பல ஆண்டுகளாகவே நீடித்து வந்தது. அவருக்கு நெருக்கமான இடங்களில் முன்னணியில் இருப்பதும் அண்ணா அறிவாலயம்தான்.
எனவே, முரசொலி அலுவலகத்துக்குச் சென்று மலர்ச்சியோடு இருக்கும் கருணாநிதி, அவரது மனதுக்கு நெருக்கமான அறிவாலயத்துக்குச் சென்றால் இன்னும் புத்துணர்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பில், விரைவில் திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்துக்கும், சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கும் வருவார் என்று திமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.