கழிப்பறை வசதி இல்லாத வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகளுக்குத் தங்களின் மகள்களை மணமுடித்துத் தர மாட்டோம் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் முடிவு செய்துள்ளது.
நாட்டில் திறந்த வெளிக் கழிப்பிடங்களைத் தவிர்க்க அரசு பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. மேலும்,திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுவருகிறது. உ.பி.யிலுள்ள ஒரு கிராமம் இந்த கழிவறை விழிப்புணர்வில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.
உ.பி. பாக்பத் மாவட்டத்தில் உள்ள பிக்வடா என்ற கிராமத்தில் பல வீடுகளில் கழிவறை வசதி இல்லை. பெண்கள் உட்பட அனைவரும் திறந்த வெளியைப் பயன்படுத்துகின்றனர்.
திறந்த வெளிக் கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்க மக்கள் தீவிரம் காட்டிவருகின்றனர். இதற்காக, கழிவறை இல்லாத வீட்டாருக்கு, மகள்களைத் திருமணம் செய்து தர மாட்டோம் என, கிராம பஞ்சாயத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். திறந்த வெளி மலம் கழிக்கும் முறை, பெண்களின் கவுரவத்தைக் குலைக்கும் வகையில் அமைந்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகப் பஞ்சாயத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிக்வடா கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் அர்விந்த் கூறும்போது, ‘‘இயற்கை உபாதைகளுக்குக் கிராமத்தில் திறந்தவெளியைப் பெண்கள் பயன்படுத்துவது அவர்களது கவுரவத்துக்கு எதிரானது. வீட்டில் கழிவறை கட்டுவதற்குப் பணம் இல்லை என்றால், அரசு திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று கழிவறை கட்டலாம். அதனால் பஞ்சாயத்தில் ஒருமனதாக நாங்கள் இப்படி முடிவெடுத்துள்ளோம். அதை மீறி யாராவது நடந்துகொண்டால், கிராமத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவார்கள்’’ எனக் கூறினார்.