மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

90 சதவிகிதம் சீரான பணப்புழக்கம்!

90 சதவிகிதம் சீரான பணப்புழக்கம்!

பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் இருந்த பணத்தின் அளவில் தற்போது 90 சதவிகிதம் புழக்கத்துக்குத் திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை நாட்டிலிருந்து ஒழிப்பதாகக் கூறி, கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பழிப்பு அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளின் மதிப்பழிக்கப்பட்டு திரும்பப் பெறப்பட்டன. மதிப்பிழந்த இந்நோட்டுகளை மக்களிடமிருந்து திரும்பப்பெற்ற ரிசர்வ் வங்கி, இவற்றுக்கு மாற்றாக புதிய வடிவிலான ரூ.2,000, ரூ.500, ரூ.200 உள்ளிட்ட நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டது. துவக்கத்தில் பணத்தட்டுப்பாடு நிலவினாலும், புதிய நோட்டுகளை வெளியிட்ட பிறகு நிலைமை சீராகத் தொடங்கியது.

பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு நவம்பர் 4ஆம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் இருந்த நோட்டுகளின் மதிப்பு ரூ.17.97 லட்சம் கோடியாகும். இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 13ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் மதிப்பு ரூ.16.18 லட்சம் கோடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பு புழக்கத்தில் இருந்த நோட்டுகளின் அளவில் 90 சதவிகிதம் திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon