மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தினர் தீக்குளிப்பு!

ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தினர் தீக்குளிப்பு!

கந்து வட்டிக் கொடுமையால் நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே காசிதர்ம கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இசக்கிமுத்து அதே பகுதியைச் சேர்ந்த சோனகாரி தேவர் என்பவரின் மருமகள் முத்துலட்சுமியிடம் 1.3 லட்ச ரூபாய் கந்து வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். 2.3 லட்ச ரூபாய் வட்டியுடன் தொகையைத் திருப்பிக் கொடுத்துள்ளார். இருப்பினும் கடன் முழுமையாகக் கொடுக்கவில்லை எனக் கூறி பணத்தைக் கொடுக்குமாறு முத்துலட்சுமி குடும்பத்தினர் நிர்பந்தபடுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இசக்கிமுத்து இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆறு முறைக்கும் மேல் புகார் அளித்துள்ளார். இருப்பினும் எந்த வித நடவடிக்கையையும் எடுக்காததால் குடும்பத்தினருடன் தீக்குளித்துள்ளார்.

நெல்லை கொக்கிரகுளத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (அக் 23) மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த நான்கு பேரும் தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

முதல் கட்ட விசாரணையில் கந்து வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் காவல் துறையினர் உதவியுடன் மிரட்டல் விடுத்ததாகவும், இதன் காரணமாகவே 4 பேரும் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிகிறது

திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதிகளில் கந்து வட்டிக்குப் பணம் வாங்கித் திருப்பிக் கொடுக்க முடியாமல் பலர் உயிரிழந்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon