மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

டாஸ்மாக் மது வகைகள் தரமானவையா?

டாஸ்மாக் மது வகைகள் தரமானவையா?

தமிழக அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகைகள் தரமானவைதானா என்னும் கேள்வி வலுவாக எழுந்துள்ளது. டாஸ்மாக்கில் விற்கப்படும் ரம்மில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட இரண்டு மடங்கிற்கும் மேல் டார்டாரிக் அமிலம் உள்ளது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மது விற்பனை மூலம் மட்டும் ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி வருவாயை அரசு பெற்றுவருகிறது. அதேவேளையில், டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவின் தரம் குறித்து அரசு எந்தவித அக்கறையும் இன்றி செயல்பட்டுவருவதாகப் புகாரும் உள்ளது. அண்மையில் நடைபெற்ற சோதனை ஒன்றில் டாஸ்மாக்கின் தரம் குறித்த குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்த மதுக்கடை ஒன்றில் விஜய் என்பவர் Ancient cask premium xxx ரம் பாட்டில் ஒன்றைச் சில மாதங்களுக்கு முன்பு வாங்கியுள்ளார். அதன் தரத்தில் அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து உணவு பாதுகாப்பு துறைக்குப் புகார் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட ரம்மை தஞ்சையில் உள்ள உணவு தரப் பரிசோதனை ஆய்வகத்திற்கு உணவுப் பாதுகாப்புத் துறை அனுப்பியுள்ளது. சோதனையில், அந்த ரம் தரம் குறைந்தது எனத் தெரியவந்தது. அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட இரண்டு மடங்கிற்கும் மேல் டார்டாரிக் அமிலம் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பிட்ட ரம் வகையின் தரம் தொடர்பாகக் கடந்த ஜனவரி மாதம், மாநில தடய அறிவியல் துறையும் சோதனை ஒன்றை நடத்தியுள்ளது, அதில், அந்த வகையில், அதிக அளவு டார்டாரிக் அமிலம், அசிடிக் அமிலம், எத்தில் அசிடேட் போன்றவை இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அமிலங்கள் நெஞ்சு எரிச்சல், இரப்பை நோய்கள் ஆகியவற்றை ஏற்படத்தக்கூடியவை.

டாஸ்மாக்கில் விற்கப்படும் பெரும்பாலான மதுக்கள் தரமில்லாதவையாகவே உள்ளன என்று பரவலாகக் குற்றம்சாட்டப்படுகிறது. அவற்றின் தரம் தொடர்பாக எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. வாடிக்கையாளர்களிடமிருந்து புகார் வரும் வேளையில் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இது தொடர்பாக நீண்ட நாட்களாக டாஸ்மாக்கில் வேலை செய்யும் ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “மது விற்பனையை அரசு ஏற்றுக்கொண்ட பின், கடைகளில் பெறப்படும் மதுவைச் சோதனைக்கு அனுப்பியதாக இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. தரத்தை உறுதிசெய்ய வேண்டிய அரசு, இந்த விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது” எனத் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

அவரது கருத்தை வைத்துப் பார்க்கும்போது, கடந்த 14 ஆண்டுகளாக மதுக்கடைகளில் எந்த விதத் தர ஆய்வுகளும் நடத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரியவருகிறது.

தமிழகத்தில் சுமார் 5000 மதுக்கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும், 30 லட்சம் லிட்டர் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், வோட்கா, வைன் போன்றவையும் 10 லட்சம் லிட்டர் பீரும் விற்கப்படுகின்றன. 2016-2017ஆம் ஆண்டில் இதுவரையில் மது விற்பனை 27 ஆயிரம் கோடி. இதில் 21 ஆயிரம் கோடி வரியாக அரசுக் கருவூலத்திற்குச் செல்கிறது. வரியின் மூலம் மட்டுமே மதுவிலிருந்து இவ்வளவு லாபம் பெறும் அரசு, அதன் தரம் தொடர்பாக மவுனமாகவே இருக்கிறது என்பதுதான் வேதனை தருகிறது என்று டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் பேசியபோது, “மற்ற பொருட்களின் தரம் தொடர்பாக அடிக்கடி சோதனை நடத்துவதுபோல் மதுவின் தரம் தொடர்பாகச் சோதனை நடத்த முடியாது. உணவு என்ற பிரிவில் மதுவகைகள் சேராது என்பதால் சட்டப் பிரச்சினைகள் எழும் என்பது இதற்கு முக்கியக் காரணம். அதேநேரத்தில், வாடிக்கையாளர்களிடம் பெறப்படும் புகாரின் அடிப்படையில் மதுவை ஆய்வகத்திற்கு அனுப்புவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கிறார்.

மதுவின் தரம் தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தொடர்பாக டாஸ்மாக் மேலாளர் கூறும்போது, “தொழிற்சாலைகளிலிருந்து சரக்கு கிடைத்த பின், கிடங்குகளில் வைத்து சோதனைகள் மேற்கொள்கிறோம். அதன் பின்னரே கடைகளுக்கு அவை அனுப்பப்படுகின்றன” என டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் விளக்கமளித்துள்ளார். வாடிக்கையாளர்கள் புகார் அளிக்க விரும்பினால், சீல் பிரிக்காத மது பாட்டில்களை எங்களிடம் சமர்ப்பிக்கலாம். நாங்கள் அவற்றைச் சோதனைக்கு அனுப்புவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளையில், பாதிக்கப்பட்ட விஜய் வைக்கும் குற்றச்சாட்டுகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது. “உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்படி தரக் குறைவான மது என்பதும் கலப்படம்தான். இந்திய தண்டனை சட்டம் 272ஆம் பிரிவின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாக இது வருகிறது” என்கிறார். மேலும், “தமிழ்நாட்டில் உள்ள மதுபான தொழிற்சாலைகள் அனைத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தில் பதிவு செய்துள்ளன. அவற்றுக்கு உணவுப் பாதுகாப்புத் துறைதான் சான்றிதழ் வழங்குகிறது. எனவே, டாஸ்மாக்கில் விற்கப்படும் மது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்தான் வருகிறது என அழுத்தமாகவே தெரிவிக்கிறார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon