இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது பன்னீர்செல்வம்தான் என்று தினகரன் ஆதரவாளரும், கர்நாடக மாநில அதிமுக செயலாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக இறுதி விசாரணை இன்று (அக்டோபர் 23) தேர்தல் ஆணையத்தில் நடைபெறவுள்ள நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, "ஆட்சியில் இருக்கக்கூடிய அமைச்சர் எங்களுக்கு மோடி இருக்கிறார் என்று கூறினால் என்ன அர்த்தம்? இரட்டை இலைச் சின்னத்தைப் பெற அவர்கள் குறுக்கு வழியில் முயற்சி செய்கிறார்களா? இவர்களுக்கு உதவுவதுதான் மோடியின் வேலையா?" என்றார்.
மேலும் அவர், "இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதற்கு நாங்கள்தான் காரணம் என்று மனோஜ் பாண்டியன் கூறுவது தவறான குற்றச்சாட்டாகும், தற்போது இரட்டை இலைச் சின்னத்தைப் பெற முயற்சிக்கிறோம். இரட்டை இலை என்பது வரலாற்றுச் சின்னம். அதை முடக்கியது பன்னீர்செல்வம்தான். அதிமுகவை டெல்லியில் அடகுவைக்க எடப்பாடி தரப்பினர் ஏற்பாடுகள் செய்துவருகிறார்கள்.
அதிமுகவில் 37 மக்களவை உறுப்பினர்கள் உள்பட 50 எம்.பி.க்கள் இருந்தும், நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி அவர்கள் நாடாளுமன்றத்தை ஏன் முடக்கவில்லை? எனவே இனி இவர்களை நம்பிப் பயனில்லை. நாட்டைக் கொள்ளையடிப்பதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்பின் வேலை, எடப்பாடி அணியில் பன்னீர்செல்வத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை, அதனால் அவர் விரைவில் பாஜகவில் இணையப் போகிறார்" என்று தெரிவித்துள்ளார்.