மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 18 ஜன 2021

இமயமலையில் கண்டறியப்பட்ட வழிபாட்டு வளாகம்!

இமயமலையில் கண்டறியப்பட்ட வழிபாட்டு வளாகம்!

இமயமலையின் சிகரத்தின் மேல் முழுக்க கற்களினால் உருவாக்கப்பட்ட இரு வழிபாட்டு வளாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ரஷ்ய தொல்லியல் மற்றும் இனவரைவியல் அறிவியல் மற்றும் கல்வி நிறுவனத்தின் இணை இயக்குநர் வியாஷெஸ்லாவ் மொலோடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ள இந்த வழிபாட்டு வளாகங்கள், மறைந்து போன நாகரீகம் இமயமலை சிகரத்தில் இருந்துள்ளதை தெரியப்படுத்துகிறது. “இமயமலையில் தூரமான உயர்ந்த இடத்தில் இருந்தாலும் யாராலும் எளிதில் போகக்கூடிய இடத்தில் தான் அமைந்துள்ளது. 200 குதிரைகளின் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் விசித்திரம் என்னவென்றால் இரண்டிலிருந்து நான்கு பேர் அதில் அமர்ந்திருக்கிறார்கள்” என மெலோடின் கூறியுள்ளார்.

இங்குள்ள அனைத்து சிற்பங்களும் உருவ ஒற்றுமையுடனும் அலங்காரத்துடன் தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு ஆய்வாளர்கள் இதற்குமுன் பதிவு செய்யாதது. இதற்கு அருகில் நிறைய நீர் நிலைகளும் கற்களினால் அமைக்கப்பட்ட பல்வேறு உருவங்களும் அமையப்பெற்றுள்ளன. இதனால் இங்கு வழிபாட்டு வளாகங்கள் அமைந்திருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மறைந்து போன நாகரீகம் ஒன்று இமயமலையில் இருந்திருப்பதற்கான ஆதாரமாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.

எந்த நாகரீகம் இந்த மரபிற்கு பின்னால் இருந்துள்ளது என்பது சரியாக தெரியவில்லை எனக் கூறும் மெலோடின் இந்திய கலை வரலாற்றில் இதுபோன்ற எந்த பதிவும் இல்லை என்று கூறியுள்ளார். “இமயமலையின் தொலைதூரப்பகுதியில் விடுபட்டுச் சென்றுள்ள இந்த சுவடின் பின்பு மக்கள் இங்கு அதிகளவில் வாழ்ந்ததற்கான சாத்தியம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மெலோடினின் கூற்றுப்படி இந்த கண்டுபிடிப்பு ஆச்சரியமாகவும் அற்புதமாகவும் உள்ளது. “இந்த ஆய்வு முடிவுகள் இந்த பூமி கோளைப் பற்றி நாம் இன்னும் முழுமையாக அறியவில்லை என்பதையே காட்டுகிறது” என்ற ஆய்வாளரின் கூற்று ஆர்ஐஏ நோவிஸ்டிக் இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மூன்று ஆண்டுகள் நடைபெற்ற இந்த ஆய்வு பயணத்தை ரஷ்ய ஆய்வாளர் நட்டாலியா போலோஸ்மாக் தலைமை தாங்கி நடத்தினார். இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சிரமமான சூழ்நிலையில் இது மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு ஐ.இ.ஏ நிதி உதவி செய்தது. ரஷ்யன் சைன்ஸ் ஃபண்ட் மற்றும் ஹெனகல் ஃபவுண்டேஷன் ஆஃப் ஜெர்மனி மானியம் வழங்கியது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon