மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

கொச்சி ஏலம்: தேயிலை விலை உயர்வு!

கொச்சி ஏலம்: தேயிலை விலை உயர்வு!

கேரள மாநிலம் கொச்சியில் சென்ற வாரம் நடைபெற்ற ஏலத்தில் பல்வேறு வகை தேயிலை விலை உயர்ந்துள்ளது.

விற்பனை எண் 42, ஏலத்துக்கு மொத்தம் 8,85,000 கிலோ அளவிலான சி.டி.சி. வகை தேயிலைத் தூள் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டது. முதல் தர சி.டி.சி. தேயிலைத் தூள் கிலோ ரூ.104 முதல் ரூ.161 வரையிலும், நடுத்தரத் தேயிலைத் தூள் வகை கிலோ ரூ.80 முதல் ரூ.118 வரையிலும், சாதாரண வகை ரூ.66 முதல் ரூ.91 வரையிலும் ஏலம் போனது. இலை வகையில் மொத்தம் 2,03,870 கிலோ அளவிலான தேயிலை விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டிருந்தது. 41,652 கிலோ அளவிலான சி.டி.சி. இலை வகைத் தேயிலையானது கேரள வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களால் ஏலத்தில் வாங்கிச் செல்லப்பட்டது.

ஆர்தடாக்ஸ் வகை தேயிலையில் மொத்தம் 10,500 கிலோ விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டது. இவை அனைத்தும் பெருமளவில் ஏற்றுமதியாளர்களால் வாங்கப்பட்டது. தூள் வகைத் தேயிலையில் அதிகபட்சமாகப் புதுத்தோட்டம் மோனிகா எஸ்.எஃப்.டி. நிறுவனம் கிலோ ரூ.161க்கு வாங்கியது. அதைத் தொடர்ந்து புதுத்தோட்டம் முருகன் எஸ்.ஆர்.டி. நிறுவனம் ரூ.160க்கு வாங்கியது. இலை வகையில், சாம்ராஜ் எஃப்.ஓ.பி. நிறுவனம் ரூ.300க்கும், சாம்ராஜ் ஓ.பி. ரூ.285க்கும் வாங்கிச் சென்றன. இம்மாதத் துவக்கத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்த மழையால் தேயிலை உற்பத்தி சரிந்து, ஏல விற்பனை விலையில் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது தேயிலை விலை உயர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon