மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 12 நவ 2019

போயஸ் கார்டன் இல்லம்: தீபா வழக்கு முடித்துவைப்பு!

போயஸ் கார்டன் இல்லம்: தீபா வழக்கு முடித்துவைப்பு!

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர் வசித்து வந்த போயஸ் கார்டன், வேதா இல்லம் நினைவிடமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 18 அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்கத் தடைவிதிக்கக் கோரி ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்டோபர் 7ஆம் தேதி வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "ஜெயலலிதா உயில் ஏதும் எழுதிவைக்காத நிலையில், அவரின் சொத்துக்களுக்கு நானும், தீபக்கும்தான் சட்டப்பூர்வமான வாரிசுகள். தனியார் சொத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்த அறிவிப்பை வெளியிட அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. எனவே ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக அறிவித்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று (அக்டோபர் 23) மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, “தீபா அளித்த மனுவின் மீது 4 வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்று அரசு தலைமை வழக்கறிஞர் உறுதியளித்தார். இதையடுத்து "போயஸ் கார்டன் வேதா இல்லம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பரிசீலனை செய்து அரசு உத்தரவிட வேண்டும்" என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் முடித்துவைத்தது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon