வங்கிகளில் 50,000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யும் போது அதற்கான ஆவணங்களைக் கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரூ.50,000க்கு மேற்பட்ட ரொக்கப் பரிவர்த்தனைக்கு வங்கிகளில் பான் எண், தனிநபர் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேற்கூறிய ஆவணங்களை அவற்றின் அசல் ஆவணங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கும் படி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் இதுதொடர்பான அறிக்கை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர் சமர்ப்பிக்கும் அடையாளச் சான்று நகலுடன் அசல் ஆவணத்தைச் சரிபார்க்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் வெளியான பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, அரசின் அனைத்துத் திட்டங்களிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. நகை வாங்குவதற்கும் பான் கார்டு கட்டாயம் போன்ற பல்வேறு விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது ரூ.50,000க்கு மேலான வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு ஆவணங்களைக் கட்டாயம் சரிபார்க்கும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.