மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

தாக்குதலைத் தொடரும் பாகிஸ்தான்!

தாக்குதலைத் தொடரும் பாகிஸ்தான்!

காஷ்மீர் எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் துப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டிருக்கிறது. இதனால் காஷ்மீர் எல்லைக் கோட்டுப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் தொடர்ந்து செயலாற்றிக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இந்த ஆண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதலை எல்லைக்கோட்டுப் பகுதியில் நிகழ்த்தியுள்ளது. மேலும், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் அடிக்கடி ஊடுருவும் சம்பவம் நடைபெற்றுவருகிறது. கடந்த சில நாள்களாக, பாகிஸ்தான் ராணுவமும் இந்தியப் பகுதிக்குள் தாக்குதல் நடத்திவருகிறது. கடந்த 18.10.2017 அன்று காலையில் , பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில், ஒரு குழந்தை உட்பட எட்டு பொதுமக்கள் காயமடைந்தனர்.

இங்குள்ள பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட உரி எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் (அக். 21) பாகிஸ்தான் ராணுவத்தினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய படையினருக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் ராணுவ போர்ட்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இரு பெண்கள் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக கமல்கோட் பகுதியில் நேற்று காலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறார்கள். இந்திய வீரர்களும் பதிலடி தந்து வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்று (அக்.23) வரை துப்பாக்கிச் சண்டை நீடித்துவருகிறது. இதனால் காஷ்மீர் எல்லைக் கோட்டுப் பகுதியில் பொது மக்களிடையே பெரும் பதற்றமும் பீதியும் ஏற்பட்டுள்ளன. எனவே பொது மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் குடி மாற்ற அரசு தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. மேலும், எல்லைக்கோட்டு பகுதிகளான டோலாஞ்சா. மட்யா, ஜப்லா, கமன், சகி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை விடுமுறை தொடரும் என்று தெரிகிறது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon