மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 நவ 2019

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் டாஸ்மாக் மது!

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் டாஸ்மாக் மது!

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவில் உயிருக்கு ஆபத்தான அமிலங்கள் உள்ளதாகப் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்கப்படும் மது வகைகள் தரம் குறைந்தவையாகவும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையாகவும் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மது அருந்துவோர் இடையே இத்தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மது வகைகளைத் தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மது அருந்துவது உடலுக்குக் கேடு... அதிலும் டாஸ்மாக் மதுவகைகளை அருந்துவது மிக மிகக் கேடு என்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அமிலங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

டார்டாரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாயுக் கோளாறு, வயிறு மற்றும் குடல் அழற்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும். அசிட்டிக் அமிலம் அதிகமானால் குடல் அரிப்பு, நெஞ்சு எரிச்சல், செரிமான அமைப்பு சேதமடைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவது உறுதி என மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அது மட்டுமின்றி ரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகரித்து அதனாலும் பல வகையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் எனத் தெரியவந்துள்ளது.

ரம் மதுவில் அளவுக்கு அதிகமாக அமிலங்கள் இருந்தது குறித்த விஷயத்தில்கூட உணவுப் பாதுகாப்புத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட மது ஆலை மீது நடவடிக்கை எடுக்காமல் உணவுப் பாதுகாப்புத் துறை தட்டிக் கழித்திருப்பதை அனுமதிக்க முடியாது. சர்ச்சைக்குரிய ரம் வகை மது ஆய்வுக்கு அனுப்பப்பட்டதால்தான் அதில் அமிலங்களும், நச்சுக்களும் கலந்திருப்பது தெரியவந்தது. மற்ற மது வகைகளிலும் இதே போன்ற நச்சுக்கள் கலந்திருக்க வாயப்புள்ளது. ஆனால், எத்தகைய ஆய்வையும் நடத்தாமல் உணவுப் பாதுகாப்புத் துறை வேடிக்கை பார்ப்பது ஏற்கத்தக்கதல்ல.

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவகைகளை தர ஆய்வுக்கு உட்படுத்துமாறு 08.07.2015 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் மதுக்கடைகள் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலான 14 ஆண்டுகளில் ஒருமுறைகூட மது வகைகளின் தரம் குறைத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படாதது துரதிருஷ்டவசமானது.

உணவுப் பாதுகாப்பு ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள இ.ஆ.ப. அதிகாரி பெ.அமுதா நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது தர ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் தொடர்ந்து மக்களின் உயிரைப் பறிப்பதை அனுமதிக்கக் கூடாது. உடனடியாக அனைத்து மதுவகைகளையும் தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கெல்லாம் மேலாக இச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணத் தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

டாஸ்மாக் மது வகைகள் தரமானவையா?

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon