மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

தொடரும் பட்டினிச் சாவு!

தொடரும் பட்டினிச் சாவு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உணவில்லாமல் பட்டினியால் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி சந்தோஷி என்ற பெண் குழந்தை உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆதார் எண்ணை இணைக்காததால் பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்காததே அக்குழந்தையின் பட்டினிச் சாவுக்குக் காரணமாகக் கூறப்பட்டது.

தற்போது அதே காரணத்தால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். அம்மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பத்யநாத் ரவிதாஸ். ரிக்ஷா வண்டி இழுப்பவரான இவர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) இறந்துவிட்டார். கடந்த சில மாதங்களாகவே அரசாங்கம் இவருடைய குடும்பத்துக்கு ரேஷன் கார்டு வழங்காமல் தாமதிப்பதாகவும், அதனால் உண்ண உணவில்லாமல் இவர் இறந்துவிட்டார் என்றும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.

ஆனால் இவருடைய மரணம் குறித்து ஜார்க்கண்ட் மாநில உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் சார்யூ ராய், “ரவிதாஸ் பட்டினியால் இறக்கவில்லை. நான் இது குறித்து அரசு அதிகாரிகளுடன் பேசியதில் அவர் உடல்நலக்குறைவால் தான் உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்தது. உணவு மற்றும் பொது விநியோகத் துறை அதிகாரிகளை அந்தக் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

ஆனால், ரவிதாஸ் குடும்ப உறுப்பினர்களோ உணவின்மை தான் காரணம் என்கிறார்கள். “கடந்த இரண்டு வாரங்களாக எங்கள் வீட்டில் அரிசி இல்லை. இதனால் உணவில்லை. ரவிதாஸின் அண்ணன் பெயரில்தான் எங்கள் ரேஷன் கார்டு இருந்தது. அவர் இறந்த பிறகு எங்களுடைய ரேஷன் கார்டை நீக்கிவிட்டார்கள். அதன் பிறகு பலமுறை விண்ணப்பித்தும் இன்னமும் எங்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. இதனால் உணவில்லாமல்தான் அவர் இறந்தார்" என்று குடும்பத்தினர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கிறார்கள்.

இதுகுறித்து தன்பாத் துணை ஆணையர் தோடே கூறும்போது, "ரவிதாஸின் குடும்பம் மிகவும் வறுமையான குடும்பம் இல்லை. அவருக்கு ஆஸ்துமா அதிகளவில் இருந்துள்ளது. ரவிதாஸ் அவருடைய மனைவி பவதி தேவியின் பெயரில் ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் செப்டம்பர் 22ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார். அவருக்கு ரேசன் கார்டு வழங்கப்படுவதற்கான பணி இறுதிக் கட்ட நிலையில் உள்ளது" என்றார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னரே விண்ணப்பித்தும் ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என்று அவருடைய குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon