மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

கந்துவட்டி கொடுமை: பெண், குழந்தைகள் உயிரிழப்பு!

கந்துவட்டி கொடுமை: பெண், குழந்தைகள் உயிரிழப்பு!

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளித்த பெண் உட்பட இரு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, சுப்புலட்சுமி தம்பதியர் கந்து வட்டி கொடுமையால் இன்று (அக். 23) காலை குடும்பத்துடன் தீக்குளித்தனர். கந்து வட்டி குறித்துக் காவல் துறையிலும், ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்து எந்தப் பலனும் இல்லை. இனி யாரும் இதுபோன்று பாதிக்கப்படக் கூடாது என்று கூறித் தீக் குளித்துள்ளனர்.

அங்கிருந்தவர்கள் வேகமாக ஓடிவந்து தீயை அணைத்தனர். எனினும் மதிசரண்யா (5), அட்சய பரணியா (1) ஆகிய 2 குழந்தைகள் உட்பட நான்கு பேரும் ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுப்புலட்சுமி, மதிசரண்யா, அட்சய பரணி ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “இசக்கிமுத்துவின் சொந்த கிராமத்தில் தனிப்படை விசாரணை நடத்திவருகிறது. இதில் கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து மிரட்டியது உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லையில் கந்துவட்டி பிரச்சினை அதிகரிப்பதாகப் புகார்கள் எழுகின்றன. கந்துவட்டி கொடுமையை ஒழிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய் துறை, காவல் துறை உதவியுடன் தனிக்குழு அமைக்கப்படும். உதவி மையம், தொலைபேசி எண் வழங்கப்பட்டுக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், கந்து வட்டி என்பது சட்டத்துக்கு எதிரானது. கந்து வட்டிக்கு பணம் வாங்கி மக்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இன்று நடைபெற்றது நான்காவது நிகழ்வாகும்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon