மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

ஃபேஸ்புக்கில் திருடர்கள் ஜாக்கிரதை!

ஃபேஸ்புக்கில் திருடர்கள் ஜாக்கிரதை!

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமான ஃபேஸ்புக், உலகில் 140 மொழிகளில் இயங்கி வருகிறது. இதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையே இது உலகம் முழுவதும் பிரபலம் அடைவதற்கான காரணமாகும். 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 200 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஃபேஸ்புக் மூலம் நூதன முறையில் திருட்டுகள் அதிகரித்துவருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் ராச்சல் காசர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராச்சல் காசர், “ஃபேஸ்புக்கில் ‘Trusted Contacts’ எனப்படும் உங்களுக்கு நெருங்கிய நண்பர்களிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் எனது அக்கவுன்ட்டை அணுகுவதற்கு அவசரமாக உங்கள் உதவி தேவை என்று கூறப்பட்டிருக்கும். இதுபோன்ற செய்தி வர நேர்ந்தால் உடனடியாக சுதாரித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இந்தச் செய்தி, உங்கள் அக்கவுன்ட் நோட்டமிடப்பட்டுக் கொண்டிருப்பதைக் குறிப்பதாகும்” என்று கூறியுள்ளார்.

சரி உங்களுக்கே தெரியாமல் உங்கள் கணக்கைத் எப்படித் திருடுவார்கள் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்:

* பொதுவாக ஒரு குறுஞ்செய்தி உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களிடமிருந்து வரும்.

* அதில் ‘என்னுடைய அக்கவுன்ட் முடக்கப்பட்டுவிட்டது. அதை மீட்க உங்கள் இ-மெயிலுக்கு வந்திருக்கும் Recovery code-ஐ எனக்கு உடனடியாக அனுப்புங்கள்’ என்று இருக்கும்.

* அப்போது அந்த நபர் உங்கள் அக்கவுன்ட்டின் “I forgot my password” என்ற வசதியை உங்களுக்குத் தெரியாமலேயே பயன்படுத்தியிருப்பார்.

* அதன் பிறகு உங்கள் இ-மெயிலுக்கு ஒரு Recovery code ஒன்று வரும். நீங்களும் அதை உதவும் நோக்கில் உங்கள் நண்பரிடத்தில் பகிர்ந்து கொள்வீர்கள்.

* இந்த Recovery code-ஐ வைத்து திருடர்கள் உங்கள் அக்கவுன்ட்டை எளிதில் ஹேக் செய்து விடுவார்கள்.

இதிலிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி?

* இதுபோன்ற செய்திகள் வந்த உடனே, முதலில் அது எங்கிருந்து வந்ததோ அந்த நண்பருக்கு போன் செய்து உறுதி செய்ய வேண்டும்.

* இதுபோன்ற செய்தி அனுப்புபவர்கள் உங்களது கோபம் மற்றும் பயத்தை தூண்டும் நோக்கில் செயல்படுவர். சிலர் பயத்தில் என்ன செய்வதென்பதை அறியாமல் அவர்கள் கேட்டதை அனுப்பிவிடுவர். இதுபோன்ற சூழ்நிலைகளில் மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

* ஃபேஸ்புக்கில் இந்த ‘Trusted Contacts’ எப்படிச் செயல்படும் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

’Trusted Contacts’ என்றால் என்ன?

ஃபேஸ்புக் லாக்-இன் செய்ய பயன்பாட்டாளருக்கு ஐடி மற்றும் பாஸ்வோர்ட் அவசியமாகும். பாதுகாப்பு காரணமாக உங்கள் அக்கவுன்ட் முடக்கப்படும்போது அதனை Recover செய்ய ‘Trusted Contacts’ எனப்படும் உங்களுக்கு நெருக்கமான நண்பர்களிடமிருந்து கிடைக்கும் Recovery code பயன்படும்.

இதில் நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த Recovery code-ஐ ஃபேஸ்புக் நிறுவனம் நமக்கு அனுப்புவதில்லை. இதனை நம் நண்பர்களே தேர்வு செய்து அனுப்புவர். எனவே, அந்த நண்பருக்குப் போன் செய்து உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும் சந்தேகப்படும்படியான ஐடியிலிருந்து உங்களுக்குக் குறுஞ்செய்தி வந்தால் உடனே இந்த லிங்க்கில் சென்று Report செய்யவும்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon