மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

டி20 அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

டி20 அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மும்பையில் நேற்று முன்தினம் (அக்டோபர் 22) நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது டி20 தொடருக்கான இந்திய அணியை எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு நேற்று (அக்டோபர் 23) அறிவித்துள்ளது.

டி20 தொடர் நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் பேட்டிங்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளரான நெஹ்ரா அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பவுலர்களில் ஒருவரான ஆசிஷ் நெஹ்ராவுக்கு இது கடைசி போட்டியாகும். நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியுடன் அனைத்துவிதமான ஐசிசி போட்டிகளில் இருந்தும் அவர் ஓய்வை அறிவித்துள்ளார். மேலும், இதன் முதல் போட்டி அவரது சொந்த ஊரான டெல்லியில் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

முதன்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 22 வயதான ஷ்ரேயஸ் ஐயர் இதுவரை 32 ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி 807 ரன்கள் குவித்துள்ளார். அதில் அதிகபட்சமாக குஜராத் அணிக்கு எதிராக 57 பந்துகளில் 96 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு புதிய வரவான 23 வயதான முகமது சிராஜ் ஹைதராபாத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அவர் இதுவரை 6 ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே, ஷ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், சஹால், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஆசிஷ் நெஹ்ரா (முதல் டி-20 போட்டி மட்டும்), முகமது சிராஜ்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon