மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 27 ஜன 2020

நெல்லிக்கனியின் மருத்துவக் குணங்கள் – ஹெல்த் ஹேமா

நெல்லிக்கனியின் மருத்துவக் குணங்கள் – ஹெல்த் ஹேமா

பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்காமல் யாருமில்லை. குறிப்பாக பெண்கள். அப்படி எட்டிப்பார்த்தபோது அங்கே மின்னம்பல கிச்சன் கீர்த்தனாவின் நெல்லிக்காய் மோர்க்குழம்பு வாசனை மூக்கைத் துளைத்தது. சக தோழி புதியதாக தோடு வாங்கி போட்டுக்கொண்டால், நாம் வளையல் வாங்கி போட்டுக்கொள்வதில்லையா... அதுபோல்தான். நாமும் நெல்லிக்கனியின் மகத்துவங்களைப் பற்றி தெரிந்ததை சொல்லலாமே எனத் தோன்றியது.

செழிப்பான கறுப்பான தலைமுடியை வளர்த்துக் காப்பதிலிருந்து மூளை, கண், காது, மூக்கு, தோல், பற்கள், ஈறுகள், தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல், இதயம், இதயநாளங்கள், கல்லீரல், கணையம், மண்ணீரல், சிறுகுடல், பெருங்குடல், கர்ப்பப்பை, சிறுநீரகம், மூட்டுக்கள், பாதங்கள் வரை அனைத்து உறுப்புகளின் திசுக்களையும் வளர்த்து அவை சீராகச் செயல்படத் தேவையான அனைத்துச் சத்துகளையும் கொண்டுள்ள ஒரே கனி, நெல்லிக்கனி.

‘நெல்லியால் நெடும்பகை போகும்’ என்பது அருமையான பழமொழி. நெடும்பகை என்பது உடல் நோய். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மார்க்கெட்டுக்கு வரும் நெல்லிக்கனிகளில் (பெருநெல்லி என்று குறிப்பிடுவர். அருநெல்லி என்பது சிறிய நெல்லி. இதை மருத்துவத்துக்குப் பயன்படுத்தக் கூடாது.)

நெல்லிக்கனிகளை வாங்கி அடிபட்டது, அழுகியது, சொத்தை, கரும்புள்ளி உள்ளவற்றை நீக்கிவிட்டு வெந்நீரில் கழுவி நிழலில் உலர்த்தியபின் நீளமான, சுத்தமான பாயில் உலர விடவும். சூரிய ஒளியின் அனல் மட்டும்பட்டால் போதும். பகல் நேர வெயிலில் 10 முதல் 20 நாள்கள் உலர்த்தவும்.

அளவு மெல்ல மெல்லச் சுருங்கி வற்றல் போல் ஆகிவிடும். அதன்பின் உடைத்து உள்ளிருக்கும் விதைகளை நீக்கி, வற்றல்களை மட்டும் சேகரித்துப் பொடி செய்து 1 கிலோவுக்கு 100 கிராம் மிளகு சேர்த்து பத்திரப்படுத்தவும்.

இதனை ஆண்டு முழுவதும் தினசரி அரை டீஸ்பூன் (பெரியவர்களுக்கு) கால் டீஸ்பூன் (சிறியவர்களுக்கு) காலையில் தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இப்படிச் சாப்பிட்ட பின் ஒரு மணி நேரத்துக்குத் தண்ணீர் தவிர வேறெதுவும் சாப்பிட வேண்டாம்.

நெல்லிப் பொடியை இப்படிச் சாப்பிட்டு வருபவர்களுக்கு வளமான தலைமுடி, துல்லியமான பார்வை, வழவழப்பான சருமம், கல்போன்ற இறுகிய தசைநார்கள், படபடப்பற்ற இதயம், சுறுசுறுப்பான மூளை, சளியற்ற நுரையீரல், விறுவிறுப்பான நடை, கல்லையும் கரைக்கும் கல்லீரல், வலியற்ற மூட்டுகள், அயராது உழைக்கும் கரங்கள் ஆகியவற்றுடன் சுருங்கக் கூறின் வளமான உடல்நலம் பெறலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக 50இல் முதுமை என்ற நிலையைக் குறைந்தபட்சம் 60இல் முதுமை என்ற அளவுக்குத் தள்ளிப்போடலாம்.

ரத்த சோகைக்கு நெல்லிக்காய் நல்ல மருந்து. கால்சியம் சத்து நிறைய நெல்லிக்காயில் இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்கும்.

நெல்லிக்கனி பல நோய்களையும் கட்டுபடுத்தும் குறிப்பாக மஞ்சள்காமாலை, நீரிழிவு. உலர் பழத்தைச் சாப்பிட்டு வர கண்பார்வை கூடும். வயிற்றுப்போக்கு நிற்கும்.

நெல்லிச்சாற்றை அருந்தி வர நுரையீரல் பெருக்கம் தீரும். புழுக்களை அழிக்கும். நெல்லியை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி, மூலநோய் நீங்கும்.

நெல்லிச்சாறு உடலிலுள்ள அதிக சர்க்கரையைக் குறைக்கும்.

நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி தின்றால் இதயக் கோளாறுகள் நீங்கும். நரம்புத் தளர்ச்சி, இளநரை, தோல் சுருக்கம் போன்றவை குணமாகும்.

பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து சாப்பிட்டுவர கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாகும்.

நெல்லியை உலர்த்திப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்க உடலில் சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.

உலர் நெல்லியை நீரில் போட்டு ஊறவைத்து இந்நீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும்.

நெல்லிப்பொடியுடன் தேன் அல்லது நெய் கலந்து இரவில் சிறிதளவு சாப்பிட்டு வர கண்பார்வை மங்குதல் மாறும்.

நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து நரை (ஆரம்பக்கட்ட நரை) முடிகள் மேல் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் இளஞ்சூடான நீரில் குளித்து வர நரை மேலும் தோன்றாது.

அஜீரண கோளாறு, மயக்கம், வாந்தி போன்றவைகளுக்கு நெல்லிக்காய் மற்றும் மோர் உகந்தது குளிர்ச்சியானது.

நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப்போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும்.

நெல்லிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட சளி, தும்மல் நீங்கும்.

பாலில் நெல்லிப்பொடியைக் கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய்விட்டு கலக்கி அருந்திவர கக்குவான் இருமல் குணமாகும்.

நெல்லிக்காயைத் தின்று வந்தால் பயோரியா நோய், ஸ்கர்வி நோய் நீங்கும். பல் கிருமிகள் அழியும்.

நெல்லி விதையை ஊறவைத்து அரைத்து, பாலில் கலந்து சாப்பிட மூலநோய் குணமாகும்.

நெல்லி லேகியம் உண்டு வந்தால் இதயம் வலிமை பெறும். ரத்தக்குழாய் அடைப்பு நீங்கும்.

நெல்லிப்பொடி, நெல்லி லேகியம் போன்றவை மதுவால் புண்ணாகிப்போன உள்ளுறுப்புகளைச் சீராக்கும்.

வெயில் காலத்தில் நெல்லிக்காய், மோர் இரண்டும் ஒரு நல்ல மருந்துகள் என்று சொல்லலாம்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon