மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

குஜராத்தின் குரலை ஒடுக்க முடியாது!

குஜராத்தின் குரலை ஒடுக்க முடியாது!

‘குஜராத் மக்களின் குரலை ஒடுக்கவோ, காசு கொடுத்து வாங்கவோ முடியாது’ என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றபோதும் அரசியல் கட்சிகள் முன்னரே தங்களின் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. இதற்கிடையே, ஆளும் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துள்ளதால் வெற்றி வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, முக்கிய தலைவர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி ஹர்திக் பட்டேல் போராட்டம் நடத்தி வருகிறார். அவரது பின் ஏராளமான பட்டேல் சமூகத்தினர் திரண்டுள்ள நிலையில், ஹர்திக்கின் உதவியாளர் நரேந்திர படேலை தங்கள் கட்சியில் சேரச் சொல்லி ரூ.1 கோடி வரை பாஜக பேரம் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது பாஜகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், குஜராத்தில் உள்ள காந்தி நகரில் நவ்சர்ஜன் ஜனதேஷ் மகா சம்மேளன் என்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி நேற்று (அக்.23) கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “குஜராத்தில் அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். கடந்த 22 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்தபோதும் குஜராத் அரசாங்கம் மக்களுக்காக நடத்தப்படவில்லை. 5 முதல் 10 தொழில் அதிபர்களுக்காகவே நடத்தப்படுகிறது.

குஜராத்தில் 30 லட்சம் பேர் வேலையின்றி உள்ளனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க குஜராத் அரசோ, மத்திய அரசோ சிறிய முயற்சியைக்கூட செய்யவில்லை. ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தையும் மோடி முடக்கிவிட்டார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதும், நான் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை அழைத்துப் பேசினேன். மத்திய அரசு ஏன் அப்படி செய்தது என்று அவரால்கூட புரிந்து கொள்ள முடியவில்லை. போராட்டக்காரர்களின் குரலை ஒடுக்கலாம் என மோடி அரசு எண்ணுகிறது. ஆனால், கோபத்தில் உள்ள இளைஞர்களின் குரலை ஒடுக்கவோ, காசு கொடுத்து வாங்கவோ முடியாது” எனக் கூறினார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon