மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

சிறப்புக் கட்டுரை: வளர்ச்சியை மீட்டெடுக்குமா மோடி அரசு?

சிறப்புக் கட்டுரை: வளர்ச்சியை மீட்டெடுக்குமா மோடி அரசு?

அமியா குமார் பக்சி

2014-15இல் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிந்துவருவதை பல்வேறு ஆய்வறிக்கைகள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளன. குறைந்தபட்சமாக 5.7 சதவிகிதத்திலிருந்து அதிகபட்சமாக 6.5 சதவிகிதம் வரையில் மட்டுமே வளர்ச்சி விகிதம் இருந்தது. ஆனால், மோடியின் ஆட்சிக்கு முன்னர் 8 சதவிகித வளர்ச்சியை இந்தியா எட்டியிருந்தது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி சரிந்து வருவதால் மோடி ஆட்சிக்கு எதிராகவும், பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. சுப்பிரமணியன் சுவாமி உட்பட சில பாஜக தலைவர்களும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகத் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கட்சி ஆட்சியில் நிதியமைச்சராகவும் பாஜக மூத்த ஆலோசகராகவும் இருந்த யஷ்வந்த் சின்ஹாவும் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கருத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

இந்தியப் பொருளாதாரமானது பணவீக்கத்தால் நலிந்துள்ளது. அதற்குக் காரணம் உணவு தானியங்கள் மற்றும் காய்கறி விலையுயர்வேயாகும். அதிகமாகக் குவிந்த அந்நிய முதலீடுகளால் ரூபாயின் மதிப்பு உயர்ந்து ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, நிதிப்பற்றாக்குறை உயரும்பட்சத்தில் ஏற்றுமதி வளர்ச்சியடையும். வங்கித்துறையும் வாராக் கடன் மற்றும் போதிய முதலீடுகள் இல்லாதது போன்ற பிரச்னைகளில் சிக்கித் தவித்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டால் வங்கிகளின் செயற்படாச் சொத்துகளின் பங்கு அதிகரித்து வங்கித்துறையே முடங்கும் நிலை உருவாகும்.

மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தோல்வியிலேயே முடிந்துள்ளது. முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் கூறியதுபோல, உற்பத்தித் துறையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பெரு நிறுவனங்கள் துறையில் போதிய அளவிலான வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை. வங்கிகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தற்போதைய நிதியமைச்சரான அருண் ஜெட்லியைவிட முன்னாள் நிதியமைச்சரான யஷ்வந்த் சின்ஹாவின் பதவிக்காலத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி சிறப்பாகவே இருந்தது என்று சின்ஹா பெருமிதம் கொள்ளலாம். ஏனெனில், 2002-03 நிதியாண்டில் 3.99 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2003-04 நிதியாண்டில் 8.06 சதவிகிதமாகவும், 2006-07 நிதியாண்டில் 9.57 சதவிகிதமாகவும் உயர்ந்தது. அதன்பின்னர் மீண்டும் 2007-08 நிதியாண்டில் 9.32 சதவிகிதமாகவும், 2008-09 நிதியாண்டில் 6.72 சதவிகிதமாகவும் குறைந்தது. பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 2009-10இல் வளர்ச்சி விகிதம் மீண்டும் 8.59 சதவிகிதமாக உயர்ந்தது.

சின்ஹா நிதியமைச்சராக இருந்தபோது இரண்டு வழிகளை வளர்ச்சிக்கான ஆயுதமாகக் கையாண்டார். ஒன்று, நீண்டகால அளவிலான மூலதன வரி முறையை ஒழித்தார். இதுபோன்ற நடவடிக்கையை அப்போது இந்தியாவைத் தவிர ஒரு சில நாடுகள் மட்டுமே மேற்கொண்டிருந்தன. வட்டிகளுக்கான அடிப்படை விகித இடைவெளியைக் குறைப்பதற்கு தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம் வழங்கிய ஆலோசனைகளை அவர் நிராகரித்தார். இரண்டாவதாக, மொரீஷியஸ் நாட்டை இந்தியாவின் சட்டபூர்வ வரி வசூல் மையமாக இந்தியாவை ஏற்கச் செய்தார். இந்திய நிறுவனம் ஒன்று வேறொரு நிறுவனத்துடன் இணைந்து தொழில் மேற்கொண்டால் 30 சதவிகித வரி செலுத்த வேண்டும். ஆனால் மொரீஷியஸ் நாட்டுடனான ஒப்பந்தம் வாயிலாக இந்திய நிறுவனம் 10 சதவிகித வரி செலுத்தினாலே போதும். இதனால் ஓர் இந்திய நிறுவனத்தால் அதன் லாபத்தை மொரீஷியஸ் நாட்டுக்கு எடுத்துச் சென்று, மீண்டும் இந்தியாவுக்கே கொண்டுவந்து பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடிகிறது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் லாபத்துக்கான வரியைச் செலுத்தாமல் தப்பித்துக்கொள்கின்றன. மொரீஷியஸில் இருப்பது நிஜமாகவே ஒரு நிறுவனமா அல்லது வெறும் முகவரி மட்டுமா என்பதை ஆய்வு செய்யவோ கண்காணிக்கவோ கூட பிரத்தியேகமாக எந்த ஆணையமும் இல்லை.

ரிசர்வ் வங்கியின் எதிர்ப்பையும் மதிக்காமல், அடையாளம் தெரியாத பங்கேற்பு குறிப்புகளைப் பங்குச் சந்தையில் செயல்பட சின்ஹா அனுமதித்தார். இருப்பினும், இதனால் இந்தியப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசென்றார் சின்ஹா. கூடுதலாக, தற்காலிக வணிகத்தை மேற்கொள்ளவும் இந்திய நிறுவனங்களை அவர் ஊக்குவித்தார். இந்திய நிறுவனங்களும் இம்மாதிரியான முதலீடுகளாலேயே லாபம் கிடைப்பதாக எண்ணின. மற்றொரு பக்கம், புதுமையான ஆபத்துகள் நிறைந்த திட்டங்களாலேயே தொழிற்புரட்சி ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இன்னும்கூட, குறைவான ஊதியம் பெறும் ஊழியர்கள், நிலம், கனிம வளங்கள் ஆகியவற்றை நம்பியே பல இந்திய நிறுவனங்கள் உள்ளன. ஐ.டி. நிறுவனங்களோ மதிப்புக் கூட்டு சேவைகளை நம்பியே உள்ளன. உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ஜப்பான், தென்கொரியா, தைவான் போன்ற நாடுகளில் கனிம வளங்களே கிடையாது. இருப்பினும் அந்நாடுகளில் பணியாளர்களுக்கான ஊதியம் அதிகமாக உள்ளது. கனிம வளங்கள் இல்லையென்றாலும் கூட, கார்கள், கணினிகள், தொலைத்தொடர்புச் சாதனங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை வளர்ந்த நாடுகளுக்கும், வளர்ந்துவரும் நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும்கூட ஜப்பான், தென்கொரியா, தைவான் போன்ற நாடுகள் ஏற்றுமதி செய்து வருகின்றன. இந்தியாவுக்கும்கூட இந்த நாடுகளில் இருந்து பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்தியப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் நகர்த்த நிதித்துறையில் ஏராளமான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு மானியம் வழங்குவது, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் அரசு செலவை அதிகப்படுத்துவது, அனைத்துத் தொலைதூர கிராமங்களையும்கூட மாநில, தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கும் உள்கட்டமைப்புத் திட்டங்களில் செலவிடுவது போன்ற நடவடிக்கைகள் இந்தியாவுக்குத் தேவை. வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு இலக்கு நிர்ணயிப்பதும் அவசியமாகிறது. விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களும் இவற்றில் அடங்கும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால் ஏற்கெனவே அரசின் வருவாய் கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளது. வரி செலுத்தத் தவறுபவர்கள் மீதும், கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுபவர்களின் மீதும் அரசு நடவடிக்கை எடுத்தால், நிதிப்பற்றாக்குறை இலக்கை மீறாமல் அரசுக்கு வருவாய் கிடைப்பதோடு வங்கிகளுக்கும் கடன் தொகையால் வருவாய் அதிகரிக்கும்.

நன்றி: தி வயர்

தமிழில்: செந்தில் குமரன்

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon