மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

அரசின் அரிசி கொள்முதல் அதிகரிப்பு!

அரசின் அரிசி கொள்முதல் அதிகரிப்பு!

மத்திய அரசு சார்பாக கொள்முதல் செய்யப்படும் அரிசியின் அளவு நடப்பு சந்தைப் பருவத்தின் முதல் மாதத்தில் 69.89 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளதாக உணவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்திய உணவுக் கழகமானது (FCI) கடந்த ஆண்டின் சந்தைப் பருவத்தில் (அக்டோபர் - செப்டம்பர்) மொத்தம் 381 லட்சம் டன் அளவிலான அரிசியைக் கொள்முதல் செய்திருந்தது. நடப்பு சந்தைப் பருவத்தில் 375 லட்சம் டன் அளவிலான அரிசியைக் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு அக்டோபர் மாதத்தில் இதுவரையில் 69.89 லட்சம் டன் அளவிலான அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் கொள்முதல் அளவு 69.31 லட்சம் டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மத்திய உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அரிசி மண்டிகளில் நெல் வரத்து அதிகரித்துள்ளது. ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளில் கடந்த வாரம் வரையில் 111 லட்சம் டன் அளவிலான நெல் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில், ஹரியானாவில் 41.33 லட்சம் டன் அரிசியும், பஞ்சாபில் 28.56 லட்சம் டன் அளவிலான அரிசியும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய பகுதிகளில் கொள்முதல் பணி தொடங்கியுள்ளது” என்றார்.

அரசானது குவிண்டாலுக்கு ரூ.1,550 ஆதார விலை கொடுத்து அரிசியை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon