மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

நெல்லிக்காய் மோர்க்குழம்பு - கிச்சன் கீர்த்தனா

நெல்லிக்காய் மோர்க்குழம்பு  - கிச்சன் கீர்த்தனா

‘என்றும் குன்றாத இளமை தரும் அமிர்தம்’ என்று நெல்லிக்கனியைச் சொல்வது வழக்கம். வெளியிடங்களில் நெல்லியை அழகாக அடுக்கிவைத்தும், உப்பு காரத்தைப் பக்குவமாக சேர்த்தும், உவர்ப்பாகவும், புளிப்பாகவும் இல்லாமல் காரமும் அதிகம் சேர்க்காமல், எல்லாம் கலந்து ரம்மியமான சுவையைத்தரும் அளவுக்கு அழகாகப் பொடியைத் தூவி விற்பார்கள். படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறதல்லவா...

அடுத்த முறை செல்லும்போது கொஞ்சம் அதிகமாகவே வாங்கி வாருங்கள். அத்தனை சுவையும் மருத்துவக் குணமும்கொண்ட நெல்லிக்காயில் மோர்க்குழம்பு செய்து சாப்பிடலாம்.

“கீர்த்தனா, நான் வைக்காத மோர்க்குழம்பா... எங்க ஃப்ளாட்ல நான் மோர்க்குழம்பு வெச்சா எல்லாருமே Flat... தெரியுமா?” என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் தோழிகளே... மோர்க்குழம்பு செய்தால் மட்டும் போதுமா... அதிலும் பல வெரைட்டீஸ்களைக் கொடுக்க வேண்டாமா... தேவையான பொருள்களை வாங்குவோமா... வாருங்கள்.

நெல்லிக்காய் மோர்க்குழம்பு

என்னென்ன தேவை?

நெல்லிக்காய் - 4, தயிர் – 1 கப், மஞ்சள் தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

அரைக்க:

தேங்காய்த் துருவல் – அரை மூடி, ஊறவைத்த அரிசி - ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, சீரகம் - அரை டீஸ்பூன்.

தாளிக்க:

தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிது, கொத்தமல்லி தழை – சிறிது.

எப்படிச் செய்வது ?

நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து, கொட்டையை நீக்கி மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். தயிரில் உப்பு, மஞ்சள் தூள், நெல்லிக்காய் விழுது மூன்றையும் கலந்து, சிறு தீயில் கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி வையுங்கள். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் போட்டுத் தாளித்து, மோர்க்குழம்பில் சேர்த்துக் கிளறுங்கள்.

கீர்த்தனா குசும்பு:

தோழி: நீ மெர்சல் பாக்கலையா?

கீர்த்தனா: தியேட்டருக்குப் போனா கொஞ்ச நேர விறுவிறுப்புதான். ஆனா வீட்லயே இருந்தா, ப்ரேக்கிங்க் நியூஸ்ல அரசியல் தலைவர்கள், நடிகர்கள் கருத்து, ஃபேஸ்புக் ட்ரெண்டிங், ட்விட்டர் சண்டைன்னு முழு நேர விறுவிறுப்பாவே இருக்கு... எப்பூடி?

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon