மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

மெர்சல் விவகாரம்: பிரதமர் தலையிட வேண்டும்!

மெர்சல் விவகாரம்: பிரதமர் தலையிட வேண்டும்!

பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்ததாகக் கூறியது தண்டனைக்குரிய குற்றம் எனவும் இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் எனவும் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி., பணமதிப்பழிப்பு, மருத்துவத்துறை ஊழல் போன்றவை பற்றி காட்சிகள் இடம்பெற்றிருந்தன. பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் ஆகியோர் படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் எனத் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், படத்துக்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதோடு பாஜகவின் கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தென்னிந்திய வர்த்தக சபை நேற்று (அக்டோபர் 23) வெளியிட்ட அறிக்கையில், “இந்தியத் தணிக்கைத்துறை என்பது இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட தன்னிச்சையாகச் செயல்படும் அமைப்பு. ஒருமுறை தணிக்கை செய்யப்பட்ட படத்தின் காட்சிகளை மாற்ற வேண்டிய தேவையில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “இணையதளத்தில் மெர்சல் படத்தை பார்த்ததாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். தமிழ்நாடு வீடியோ பைரசி சட்டத்தின்படி அது குற்றமாகும். இது தொடர்பாக ஏற்கெனவே பிரதமர் அலுவலகத்துக்கு புகார் அளித்துள்ளோம். (PMO PG/E 2017/0562394) பிரதமர் நரேந்திரமோடிக்கும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கும் எச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளோம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon