மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

விஜய் எழுதும் புதிய ‘நாளைய தீர்ப்பு’!

விஜய் எழுதும் புதிய ‘நாளைய தீர்ப்பு’!

மெர்சல் திரைப்படத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பு குறித்து, விஜய் என்ன நினைக்கிறார் என்று இதுவரையிலும் எந்த தகவலும் இல்லை. விஸ்வரூபத்துக்குப் பிரச்னை ஏற்பட்டபோது கமல் வெளியே வந்து பேசினார். தன் பக்கத்து நியாயத்தை மக்களிடம் கொட்டினார். ‘முடியாதென்றால் சொல்லி விடுங்கள் நாட்டைவிட்டே போகிறேன்’ என்றெல்லாம் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், கிட்டத்தட்ட மெர்சல் படம் ரிலீஸாகாத அளவுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னை இது. ரிலீஸான பிறகு படத்தை தியேட்டரிலிருந்து எடுத்துவிடுவார்களோ என அஞ்சும் அளவுக்கு அதிகாரப் பிரச்னைகளைக் கடந்த பிறகும் விஜய் இதுவரையில் பொது மன்றத்தில் தன் கருத்தை முன்வைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுக்கிறார் என்றால் சாதாரணமாக விடக்கூடியதா?

எப்போதும் விஜய்யின் பக்கத்தில் நின்று அவரது வெற்றிகளையும், தோல்விகளையும் சரிபாதி பிரித்துக்கொண்டிருக்கும் எஸ்.ஏ.சியின் பேட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது உண்மைதான். ஆனால், அவரது அனைத்து தொலைக்காட்சிகளின் பேட்டியும் சொல்லி நிற்பது ஒன்றே ஒன்றுதான். விஜய் இனி தனி நபர். அவரது செயல்பாடுகளில் தந்தை என்ற ரீதியில் என் தலையீடு இருக்காது என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார்.

பேட்டியெடுத்த சீனியர் பத்திரிகையாளர்கள் பலரும் எத்தனையோ விதங்களில் தங்களது கேள்வி வாள்களை வளைத்து வளைத்து செருகிப் பார்த்தார்கள். ஆனால், தனது இத்தனை வருட அனுபவம் சாதாரணமானதல்ல என்பதை அந்தக் கேள்விகளுக்கு லாகவமாகப் பதிலளித்து நிரூபித்துவிட்டார்.

விஜய்யை முன்வைத்து கேட்கப்பட்ட அத்தனைக் கேள்விகளுக்கும், தனது நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி இந்த சமூகத்தை எஸ்.ஏ.சி இப்படித்தான் பார்க்கிறார் என்ற ரீதியிலேயே பதில்களை அடுக்கினார். உதாரணத்துக்கு சில பதில்களைச் சொல்லலாம்.

மெர்சலில் வழக்கத்தைவிட அதிகமாகக் காணப்பட்ட எம்.ஜி.ஆர். ஸ்கிரீன் பிரசென்டேஷனைப் பற்றிய கேள்விக்கு எம்.ஜி.ஆர். மக்களுக்காக வாழ்ந்த மனிதர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வாழ்ந்தவர். தான் சிகரெட் பிடித்தால், மது அருந்தினால் தன் ரசிகர்களும் அதைச் செய்வார்களோ என்று படத்துக்காகக்கூட அவற்றைத் தொடாமல் வாழ்ந்த மனிதர். அவரை இந்த நாட்டிலுள்ள அனைவருமே ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பதில் சொல்கிறார் எஸ்.ஏ.சி.

மெர்சல் படத்தின் மிக முக்கியமான பிரச்னையான ஜி.எஸ்.டி. தொடர்பான கேள்விக்கும்கூட, எந்த நாட்டிலாவது இப்படி அவசர அவசரமாகத் திட்டத்தை அறிவித்து மக்களை இன்னலுக்கு ஆளாக்கிய அரசாங்கத்தைப் பார்த்ததுண்டா என்று கேட்கிறாரே தவிர, மெர்சல் குறித்தும், விஜய் பேசியதன் மைய நீரோட்டத்தையும் கையிலெடுக்கவில்லை.

மெர்சல் படத்துக்குக் கதையும், திரைக்கதையும் எழுதிய அட்லி -விஜயேந்திர பிரசாத் ஆகியோரை விட்டுவிட்டு விஜய் மீது தனிமனித தாக்குதல் நடத்திய பாஜகவின் தமிழகத் தலைவர்களைப் பற்றிக் கேள்வியெழுப்பினால் மோடி மிக தைரியமானவர். தன்னம்பிக்கை அதிகம் உடைய மனிதர். ஆனால், அந்த நம்பிக்கை இங்குள்ளவர்களுக்கு அவர் மேல் இல்லை என்று லெக் சைடு வரும் பந்தை ஆஃப் சைடில் சிக்ஸர் அடிக்கிறார்.

எஸ்.ஏ.சியின் இந்தச் செயல்பாடுகள் விஜய் பற்றியும் அவரது படத்துக்கு ஏற்பட்ட நிலை பற்றியும் விஜய் இப்படி செய்யப்போகிறார்... இப்படி வருவார் என்றெல்லாம் முன்பு மாதிரி பேசுவதில்லை என்று தெளிவான முடிவிலிருப்பதாகத் தெரிகிறது. எனவே, விஜய்யின் மனநிலை பற்றி அறிய அவராகப் பேச விரும்பும் வரை காத்திருந்து விஜய்யின் தனி மனித உரிமைக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் தேவையான இடம்தருவதே தற்போதைய சூழலில் மிகச்சிறந்த செயலாக அமையும்.

ஒவ்வொரு படம் வெற்றியடையும்போதும் (அல்லது தனது படத்தில் உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக) விஜய் அன்பளிப்பாகக் கொடுக்கும் மோதிரம், செயின் ஆகியவற்றை வழங்கும் நிகழ்வுகூட இதுவரையில் ஏற்பாடு செய்யப்படவில்லை. இப்போதுதான் ஓரளவுக்கு மெர்சல் சிக்கல்கள் தீர்ந்திருக்கின்றன. மெர்சலில் வெற்றியும் பெற்றிருக்கிறார். எனவே, அவராக வெளியே வரும்வரை காத்திருக்க வேண்டியது அவரது ரசிகர்களின் கடமை. இத்தனை வருடங்களாக எஸ்.ஏ.சி. தான் விஜய்க்கான ஸ்கிரிப்டுகளை ஓகே செய்திருக்கிறார் என்று பேசப்பட்டது. இப்போதைய நிலைப்படி விஜய் தனக்கான ஸ்கிரிப்டுகளை அவரே எழுதத் தொடங்கிவிட்டார்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon