மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

ஆண்கள் மேலும் அழகாக இருக்க சில டிப்ஸ்கள் - பியூட்டி ப்ரியா

ஆண்கள் மேலும் அழகாக இருக்க சில டிப்ஸ்கள் - பியூட்டி ப்ரியா

எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை கைவிடாத ஆண்தான் #ஆணழகன். ஆண் அனைத்தும் இழந்தாலும் அவனை விலகாது உறுதுணையாக இருந்து ஊக்கமளிக்கும் பெண்தான் சிறந்த #அழகி.

அழகிகள் மேலும் அழகாக பற்பல டிப்ஸ்களைத் தினம் தினம் பார்த்து வருகிறோம். அதில் ஒன்று மனது. மனது அழகாக இருக்க, மலர்ச்சியுடன் இருக்க முகம் பொலிவாகும். பெண்களின் முகமும் மனமும் அழகாக தன் அழகனும் அழகாயிருத்தலும் ஒரு காரணமல்லவா...

அப்படியென்றால் ஆண்கள் மேலும் தங்களை அழகாக்கிக்கொண்டு வலம் வர சில டிப்ஸ்களை இன்று காணலாம்.

ஆண்கள் பொதுவாகத் தலையில் எண்ணெய் தேய்ப்பது கிடையாது. பொடுகு அதிகரிக்க, இதுவும் ஒரு காரணம். சூடான உடலைக்கொண்டவர்கள் தலைக்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர், தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு, காலையில் தலைக்குக் குளிக்கலாம். பொடுகு பிரச்னை உள்ளவர்கள் தலையில் எண்ணெய் வைக்கக் கூடாது.

மன அழுத்தம், தலைக்கு எண்ணெய் தேய்க்காதது, சரிவிகித உணவு உண்ணாமை, தூக்கமின்மை போன்ற காரணங்களால், இளம் வயதிலேயே முடி கொட்ட ஆரம்பிக்கும். வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்கள் மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றைச் சாப்பிட்டுவந்தால், நன்றாக முடி வளரும்.

ஹேர் ஸ்டரெயிட்டனிங், ஹேர் கலரிங் போன்றவை செயற்கையான அழகு மட்டுமே. இதனால் பக்க விளைவுகள் ஏற்படலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட்கொண்டு, முறையாகத் தூங்கி எழுந்தாலே, நன்றாக முடி வளரும்.

நகங்களை ஒழுங்காக வெட்டாமல் இருப்பதாலும் நகம் கடிப்பதாலும் நகத்தில் சேரும் அழுக்குகள், சாப்பிடும்போது உடலுக்குள் செல்கிறது. சிலருக்கு கியூட்டிகில்ஸ் (Cuticles) எனப்படும் வெள்ளை நிற சிறிய அளவிலான சதை நகத்தின் ஓரத்தில் வளரும். இவற்றைக் கண்டிப்பாகக் கடிக்கக் கூடாது. 15 நாள்களுக்கு ஒருமுறை நகங்களைச் சீராக வெட்ட வேண்டும்.

தலையில் எண்ணெய் வைக்காதது, ஒழுங்காகத் தண்ணீர் குடிக்காதது போன்ற காரணங்களால் சிலருக்குக் குதிகால் வெடிப்பு ஏற்படலாம். எனவே, நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். வாரம் ஒருமுறை வாளியில் சுடுநீர் நிரப்பி, அதில் எலுமிச்சைச்சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து பாதங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்தால், வெடிப்பு குறையும்.

செய்த தப்பை மறைக்க சமரசம் செய்பவர்கள் ஆண்கள்... செய்தது தப்பே இல்லை என்று சண்டை போடுபவர்கள் பெண்கள்!

ஆணழகன்

“ஹேய் ப்ரியா... யாருடி அவன்?” என்று யாரோ கேட்பது காதில் ஒலிக்கிறது. எஸ்கேப்!

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon